For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயுதங்களை கீழே போடுங்கள்-புலிகளுக்கு ப. சிதம்பரம் வேண்டுகோள்

By Sridhar L
Google Oneindia Tamil News

Chidambaram
சென்னை: விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடுகிறோம் என்று அறிவித்தால் போதும். இலங்கை அரசை வற்புறுத்தி போரை நிறுத்தச் சொல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்த விளக்கும் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடந்தது. இதி்ல் சிதம்பரம் பேசுகையில்,

தமிழர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் வசிக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் நம்மவர்கள்-இந்திய வம்சாவளியினர். அவர்கள் உணர்வும், நம் உணர்வும் ஒன்றுதான். தமிழனுக்கு தீங்கு ஏற்பட்டால் நம் இதயம் பதைப்பது இயல்பு. அவர்கள் உரிமை மறுக்கப்பட்டால் நம் உரிமை மறுக்கப்படுவது போல் துடிக்கிறோம்.

நான் முதன் முதலாக எம்பியாக இருந்தபோது, ராஜீவ் காந்தியால் பணிக்கப்பட்டு, சென்னையில் நள்ளிரவில் நானே கார் ஓட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் பிரபாகரனை ரகசியமாக சந்தித்தேன். பிரபாகரனை தம்பி என்று அழைத்தேன். அப்போது ஸ்ரீசபாரத்தினம், உமா மகேசுவரன், பத்மனாபா, பாலகுமாரன் ஆகியோர் இருந்தார்கள்.

அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? அதற்குப்பிறகு பழம்பெரும் தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் எங்கே? அவருக்கு துணையாக வந்த சிவசிதம்பரம் இப்போது எங்கே இருக்கிறார்? இலங்கை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் திருச்செல்வம் எங்கே? பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால், தமிழர்களுடைய அனைத்து தலைவர்களையும் கொன்றதுதான்.

அந்தத் தவறுதான் பிரபாகரனை துரத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியப் பிரதமராக இருந்த ஒருவரை கொன்றார்களே அந்த மாபாதக செயல்தான் இன்னமும் அவர்களை துரத்தித் துரத்தித் துன்புறுத்துகிறது.

அதற்காக அவர்கள் மீது காழ்ப்புணர்வு கிடையாது. இது நடந்த வரலாறு. தமிழர் தலைவர்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ் இனத்துடைய தலைமை ஒழிக்கப்பட்டது. ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான் இருக்க வேண்டும், ஓரே இயக்கம் புலிகள் இயக்கம்தான் இருக்க வேண்டும் எங்களிடம் அரசைத் தரவேண்டும். அந்த அதிகாரம் வந்தால் நாங்கள் சர்வாதிகாரியாக ஆள்வோம் என்று சொன்னார்களோ, அங்குதான் பிரபாகரன் மிகப்பெரிய பிழை செய்தார்.

இதனால் தான் கடந்த 22 ஆண்டு காலமாக இலங்கை பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் இருக்கிறது. 1985ல் இந்திய அரசு சார்பில் இலங்கை சென்று ஜெயவர்த்தனேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன்பிறகு நட்வர் சிங்கோடு சென்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதன் முடிவில், இந்தியா பேப்பர்' என்ற ஆவணத்தை தயாரித்தோம். இந்திய, அமெரிக்க அரசியல் சாசனங்களைத் தழுவி, பன்முக நாடுகளின் சாசனங்களை தழுவி தயாரித்த அதை ஜெயவர்த்தேனே ஒப்புக்கொண்ட நிலையில், 1987ல் ஒப்பந்தம் நிறைவேறியது.

அந்த உடன்பாட்டை பிரபாகரனும் அரை மனதாக ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்று ஜெயவர்த்தனேவுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். அன்றே தனது மரண சாசனத்தில் ராஜீவ் கையெழுத்துப் போட்டார் என்பது அதன் பிறகே எங்களுக்குத் தெரிந்தது. இது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை மறந்துவிடக் கூடாது.

பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் அது. அது நிறைவேறியிருந்தால் கடந்த 22 ஆண்டுகாலமாக தமிழ் மாநிலம் உருவாகியிருக்கும், தமிழன் ஒருவர் முதல்வராக ஆகியிருப்பார். தமிழர்களுக்கு மொழி-பேச்சுரிமையை பெற்றுத் தந்திருப்போம். அதை தடுத்தது யார்? இந்திய அமைதிப்படை இலங்கை சென்று ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகிய கட்டாயத்தை ஏற்படுத்தியது யார்?.

20 ஆண்டுகளாக போர் நடக்கிறது என்று புலம்புகிறோமே. இந்திய- இலங்கை உடன்பாட்டை காலடியில் போட்டு மிதித்தவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. 91ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி வரை விடுதலைப் புலிகளுக்கும், நமக்கும் பகை கிடையாது.

அவர்கள் எவ்வளவு தவறுகளை செய்தாலும், இந்திய-இலங்கை உடன்பாட்டை முறியடித்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு, அவர்களுக்காகத்தான் அப்போது வாதாடினோம்.

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மாபாதக செயலுக்கு பிறகுதான் இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக புலிகளை ஏற்க முடியாது என்ற நிலைக்கு காங்கிரஸ் வந்தது.

இலங்கையிலே நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், 1987ல் இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தித்தான் அனைத்து தமிழர்களுக்கும் நல்ல தீர்வை ஏற்படுத்தித் தர முடியும்.

தனி மனிதன் கையில் அதிகாரம் கொடுப்பதா தீர்வு?. அங்குள்ள அனைத்து தமிழர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டுமே தவிர, ஒரு சர்வாதிகாரியை உருவாக்க நாம் போராடவில்லை.

பேச்சுவார்த்தை எப்படி நடக்கும்? இரு தரப்பும் வந்தால்தான் பேச்சுவார்த்தை. இருவரும் போரை கைவிட வேண்டும். போரை நிறுத்துங்கள் என்று இலங்கை அரசிடம் சொல்கிறோம். புலிகளிடமும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்கிறோம். ஒரு தரப்பு மட்டும் வந்தால் எப்படி போர் நிறுத்தம் நடக்கும்.

ஆயுதத்தை கீழே போட்டால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நான் ஆயுதத்தோடு வருகிறேன். நீ காகித்தோடு வா என்றால் பேச்சுவார்த்தை நடக்காது.

இதை ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு இந்தியாவின் கொள்கை தெரிகிறது. இலங்கையில் ஆயுதங்களை போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்தால்தான் முடியும் என்று 3 கட்சிகளுக்கும் தெரிந்திருப்பதால் தமிழகம் அமைதியாக உள்ளது.

தம்பி பிரபாகரன் அவர்களே, ஆயுதத்தை கீழே போட்டு விடுங்கள். போராளிகள் அண்மைக் காலத்தில் எந்த நாட்டையும் போராட்டத்தால் துண்டாடியது இல்லை. எந்த ராணுவமும் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது. எந்த பிரதமரும், நாட்டை போராளிகள் துண்டாடுவதை விரும்ப மாட்டார்.

எப்படி இந்தியா, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாதோ, அவ்வாறே இன்னொரு நாட்டை பார்த்து போராளிகளுடன் பேச்சுவார்ததை நடத்து என்ற சொல்ல முடியாது. நமக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒன்றா?.

விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே போடுகிறோம் என்று அறிவித்தால் போதும். இலங்கை அரசை வற்புறுத்தி போரை நிறுத்தச் சொல்லலாம் என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X