For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸிடம் சீட்: முலாயம்-பவார் கணக்கு பலிக்குமா?

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸிடமிருந்து கூடுதல் சீட்களைப் பெறுவதற்காக பாஜகவுடன் நெருங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார் முலாயம் சிங் யாதவ். அதே சமயம், பாஜகவுடன் நிபந்தனையுடன் கூடிய உறவை ஏற்படுத்திக் கொள்வது குறித்து அவசரம் காட்ட மாட்டோம் எனவும் கூறி இரு கட்சிகளையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பதற்காக காங்கிரஸுடன் நெருங்கி வந்தது முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி.

அந்தக் கூட்டணியை வருகிற லோக்சபா தேர்தலிலும் நீடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதே எண்ணத்தில்தான் முலாயமும் உள்ளார்.

நாட்டிலேயே அதிக எம்.பி. தொகுதிகளைக் கொண்ட உ.பியில் பலம் வாய்ந்த மாயாவதியை எதிர்கொள்ள முலாயமின் உதவி தேவை என்பது காங்கிரஸின் எண்ணம். கிட்டத்தட்ட அதே நிலையில்தான் முலாயமும் உள்ளார்.

ஆனால் முலாயமுக்கு அதிக சீட்களைத் தர உ.பி. மாநில காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது.

இதையடுத்து அதிரடியாக காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் முலாயம் சிங் யாதவ்.

தன்னிச்சையாக பல தொகுதிகளுக்கு அவர் வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளார். இது காங்கிரஸை எரிச்சல்படுத்தியுள்ளது.

கூட்டணி வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையே பனிப்போர் வெடித்துள்ளது.

இந்த நிலையில்தான் பாஜகவுடன் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புதிய குண்டைத் தூக்கிப் போட்டது சமாஜ்வாடிக் கட்சி. சில நிபந்தனைகளுடன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என சமாஜ்வாடி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் காங்கிரஸிடமிருந்து அதிக அளவிலான சீட்களைப் பெறுவதற்கான முறைமுக நெருக்குதலே காரணம் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அவசரம் காட்ட மாட்டோம் என முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், பாஜக இந்துத்வா கொள்கைகளை கைவிட்டால், அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அயோத்திப் பிரச்சினையை பாஜக விட வேண்டும். அதேபோல காஷ்மீர் மீதான அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் பொது மக்கள் நலன் கருதி பாஜகவுடன் கை கோர்ப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இதுகுறித்து நான் ஏற்கனவே லோக்சபாவிலும் கூறியுள்ளேன். ஏன், அத்வானியிடமே கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார் முலாயம்.

ஆனால் முலாயமின் இந்தப் பேச்சை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார் முலாயம் என பாஜக பாய்ந்துள்ளது.

பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், பாஜக, சமாஜ்வாடியுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. குறுகிய அரசியல் லாபத்திற்காக பாஜக தனது கொள்கைகளை விட முடியாது, விடாது.

வாக்காளர்களைக் குழப்பும் வகையிலும், தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தி அதனால் பலன் அடையும் நோக்கிலேயே இவ்வாறு பேசி வருகிறது சமாஜ்வாடிக் கட்சி என்றார் நக்வி.

மகாராஷ்டிராவில் பவார் செய்யும் குழப்பம்...

இப்படி முலாயம் சிங் ஒரு பக்கம் குழப்பிக் கொண்டிருக்கையில் மகாராஷ்டிராவில் சரத் பவார் தன் பங்குக்கு புதுக் குழப்பத்தை தொடங்கியிருக்கிறார். இவரும் கூட காங்கிரஸிடமிருந்து அதிக சீட்களை எதிர்பார்த்தே இவ்வாறு நடந்து கொள்வதாக கருதப்படுகிறது.

எதிர் முகாமில் இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசியுள்ளார் சரத்பவார். அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியே இது என சிவசேனா தரப்பில் கூறப்படுவதால் காங்கிரஸ் வட்டாரம் குழப்பமடைந்துள்ளது.

சிவசேனா கட்சி ஏற்கனவே உழவர்கள் மற்றும் உழைப்பாளர்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு மகாராஷ்டிராவின் பல கிராமங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது.

இந்த நிலையில், சரத்பவாரையும் தன் பக்கம் இழுத்தால் பெரும் லாபம் கிடைக்கும் என கணக்குப் போடுகிறது சிவசேனா. இதற்காக பாஜகவையும் கைகழுவ அது தயாராகி விட்டதாக கருதப்படுகிறது.

பவார் சிவசேனாவுடன் இணைந்தால் அது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும் அடியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிராவில் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. உ.பிக்கு அடுத்து அதிக தொகுதிகளைக் கொண்ட 2வது மாநிலம் மகாராஷ்டிராதான். எனவே இங்கு அமையும் கூட்டணியும் தேசிய அளவில் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சரத் பவார் உண்மையிலேயே கூட்டணி மாற முயற்சிக்கிறாரா அல்லது காங்கிரஸை மிரட்ட இப்படி நடந்து கொள்கிறாரா என்பது குழப்பமாகவே உள்ளது.

அதேசமயம், சிவசேனா, சரத் பவார், உழவர், உழைப்பாளர் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தால் நிச்சயம் அந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் முலாயம் சிங் யாதவும், சரத் பவாரும் அவ்வளவு சீக்கிரம் காங்கிரஸை கழட்டி விட முடியாது. சீட் கேட்டு டிமாண்ட் செய்யத்தான் இவ்வாறு பூச்சாண்டி காட்டுவதாக தேசிய அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பவார், முலாயம் கணக்கு பலிக்குமா, காங்கிரஸ் இவர்களை வைத்துக் கொள்ளுமா அல்லது இழக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X