For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம் - மதுரையில் பஸ்கள் எரிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

மதுரை: சென்னை உயர்நீதி்மன்றத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மதுரையில் ..

நேற்று மாலை 4-30 மணி அளவில் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையின் மெயின் ரோடு பகுதியில் உள்ள மெயின் கேட்டை வக்கீல்கள் மூடி பூட்டு போட்டனர்.

பின்னர் கோர்ட்டில் உள்ள அனைத்து வாசல்களில் உள்ள வாசல் கதவுகளும் மூடப்பட்டன. இது பற்றி தகவல் அறிந்ததும் அதிரடிப்படை, தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் மற்றும் போலீஸ் வாகனங்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டன.

இதனால் அங்கும் போலீஸாருக்கம், வக்கீல்களுக்கும் இடையே அடிதடி நடக்கும் சூழல் உருவானது. இதையடுத்து நீதிபதி பி.கே.மிஸ்ரா போலீஸ் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இதையடுத்து சில வக்கீல்கள், ஐகோர்ட்டு கிளை வளாகத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையம் மீது கல்வீசி தாக்கினார்கள். இதையடுத்து போலீஸார் தடிகளுடன் கிளை வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வக்கீல்களை சரமாரியாக தாக்கினர். இதில் 4 வக்கீல்கள் படுகாயம் அடைந்தனர்.

செஷன்ஸ் கோர்ட்டில் 3 பஸ்கள் எரிப்பு

மதுரை புறநகர் பகுதியில் செசன்சு கோர்ட் உள்ளது. ஜப்தி செய்யப்பட்ட 3 அரசு பஸ்கள் அந்த கோர்ட் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று இரவு 10.30 மணி அளவில் மர்ம மனிதர்கள் சிலர் அந்த பஸ்களுக்கு தீ வைத்துவிட்டு ஓடி விட்டனர். இதில் 3 பஸ்களும் தீப்பிடித்து எரிந்து நாசம் அடைந்தன.

வக்கீல்கள் போராட்டத்திற்கும், இதற்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

துப்பாக்கி - வாக்கி டாக்கி மாயம்:

இந்த நிலையில் புறக்காவல் நிலையத்தைத் தாக்கிய வக்கீல்களை அங்கிருந்து விரட்டியடித்த போலீஸார், காவல் நிலையத்தில் இருந்த வாக்கி டாக்கி, துப்பாக்கி ஆகியவற்றைக் காணாமல் திகைத்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது காவல் நிலையத்திற்கு இருட்டான பகுதியில் அவை கிடந்தது தெரிய வந்து போலீஸார் மீட்டனர்.

சில வக்கீல்கள் இரவு முழுவதும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவு வரை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

கோவையில் ...

கோவையில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் செஞ்சிலுவை சங்கம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த போலீஸ் வேனை சிலர் அங்கிருந்த இரும்பு தடுப்புகளை நிறுத்தி மறித்தனர்.

கோவை போதை பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் ஒரு குற்றவாளியை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோர்ட்டு வளாகத்துக்கு வந்தனர். அப்போது போலீஸ் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் ஜீப்பின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இரவு 7-30 மணி அளவில் ஒரு கும்பல் அந்த ஜீப்புக்கு தீவைத்தது. ஜீப்பின் பெரும்பகுதி தீயில் எரிந்து நாசம் அடைந்தது. இதற்கிடையில் கோர்ட் வளாகம் முன்பு போலீஸ் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

திருச்சியில் ...

திருச்சி கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் போலீசாருக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக்கொண்டு மாலை நேர கோர்ட்டுகளின் கதவுகளை இழுத்து மூடி பூட்டு போட்டனர். இதனால் மாலை நேர கோர்ட்டுகள் இயங்கவில்லை.

சென்னை சம்பவத்தை கண்டித்து நெல்லை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 20 பேர் கலந்து கொண்டு போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

புதுக்கோட்டை கோர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வக்கீல்கள் பழைய பஸ் நிலையம் அருகே கூடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வேலூர் கோர்ட்டு வளாகத்தில் நேற்று மாலை 6.15 மணிக்கு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போலீசாரை கண்டித்து கோஷம் போட்டபடி கோர்ட்டு வளாகத்தை வக்கீல்கள் ஒருமுறை சுற்றி வந்தனர்.

மரத்தை வெட்டி போராட்டம் ...

திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு நேற்று மாலை 5.30 மணி அளவில் வக்கீல்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வக்கீல்கள் மரக்கிளையை வெட்டி ரோட்டின் நடுவில் போட்டனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து 30 நிமிட நேரம் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் வக்கீல்கள் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர். திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

கோர்ட்களுக்கு இன்று விடுமுறை

உயர்நீதிமன்ற வன்முறையைத் தொடர்ந்து தமிழகம் முற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கும் முகோபாத்யாயா தலைமையில் அனைத்து நீதிபதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்களுக்கும் விடுமுறை விட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதே போல புதுவையிலும் கோர்ட்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X