For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்: மாயா பென்னுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் தொடர்புடைய குஜராத் மாநில மகளிர் நலத்துறை இணை அமைச்சர் மாயா பென் கோத்னானி மற்றும் வி.எச்.பி. பொதுச் செயலாளர் ஜெயதீப் படேல் ஆகியோருக்கு அகமதாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான பயங்கர கலவரத்தில் இந்த இருவரும் மிகக் கொடூரமான முறையில் கலவரத்தைத் தூண்டி விட்டு அரங்கேற்றினர் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

நரோடா - பாடியா பகுதியில், கலவரக்காரர்களை தூண்டி விட்டு முஸ்லீம் மக்களை கொடூரமாகக் கொல்லத் தூண்டியவர் மாயா பென். முஸ்லீம் பெண்களை கெடுக்குமாறும் வி.எச்.பி, பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்களை தூண்டி விட்ட கொடூரத்தை நிகழ்த்தியவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.

மேலும், பெட்ரோல், மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை குண்டர்களிடம் கொடுத்து முஸ்லீம்களையும், அவர்களது சொத்துக்களையும் எரிக்கவும் தூண்டினார். மாயா பென்னும், படேலும் கலவரம் இருந்த இடத்திற்கு நேரில் சென்று அவற்றை நிறைவேற்றியதாகவும் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு இவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் கொலைகள் தொடர்பான விவரங்களை முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூடி மறைக்க முயற்சித்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றமே இந்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது.

அந்தக் குழு மாயா பென் மற்றும் படேலை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவரும் தலைமறைவு குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இருவரும் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி அஷ்வனி, முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், இருவருக்கும் கீழ் நீதிமன்றத்தி்ல வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பான விசாரணை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றம் அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி மாயா பென் மற்றும் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 19ம் தேதியே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அப்போது நீதிபதி ஆனந்த் தவே விசாரிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு கோரி உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் வழக்கை திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து நீதிபதி வகேலா முன்பு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி நரோடா - பாடியா வழக்கின் மூன்று சாட்சிகள் கோரியுள்ளனர். அவர்களும் தங்களது விளக்க மனுவை மார்ச் 2ம் தேதி தாக்கல் செய்யுமாறு நீதிபதி வகேலா உத்தரவிட்டுள்ளார்.

டி.எஸ்.பிக்கு ஜாமீன்:

இதற்கிடையே, மாயாபென் மற்றும் படேலுக்கு முன்ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிபதி அஷ்வனி, பல்சார் டி.எஸ்.பி. எர்டா என்பவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளார்.

இந்த எர்டா, குல்பர்க் படுகொலைச் சம்பவம் தொடர்பாக பிப்ரவரி 8ம் தேதிதான் கைது செய்யப்பட்டார். சிறப்பு விசாரணைக் குழுவின் காவலில் இருந்து வந்தார்.

இவர் ஜாமீன் கோரி அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார். ஐந்து நாள் போலீஸ் காவலில் இருந்த அவருக்கு, போலீஸ் காவல் முடிந்ததும், தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தின்போது இந்த எர்டா, மேகானிநகர் காவல் நிலையத்தில் சீனியர் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்காமல், கலவரத்தைத் தடுத்து நிறுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக இவரது போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழு சார்பில் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை கோர்ட் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் குல்பர்க் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதுல் வைத்யா மற்றும் மேகாசிங் செளத்ரி ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.

இன்னொரு இன்ஸ்பெக்டர் சரண்:

இதற்கிடையே, நரோடா காவல் நிலையத்தில் கலவரம் நடந்த சமயத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தற்போது சர்க்கிள் இன்ஸ்பெக்டராக உள்ள வி.எஸ்.கோஹில் என்பவர் சிறப்பு விசாரணைக் குழு முன்பு சரணடந்தார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் சிறையி்ல் அடைத்தனர்.

இதேபோல குல்பர்க் கலவரத்தில் தொடர்புடைய பாஜகவைச் சேர்ந்த சுனிலால் பிரஜாபதி, பிபின் படேல் ஆகியோரும் சிறப்பு விசாரணைக் குழு முன்பு சரணடைந்தனர். அவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையி்ல அடைக்கப்பட்டனர்.

பிரஜாபதியும், படேலும், தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் அமளி:

இந்த நிலையில், மோடி அரசுக்கு எதிராகவும், மாயா பென் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்தும் குஜராத் சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தார்த்த படேல் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அசோக் பட் அனுமதி மறுக்கவே காங்கிரஸ் கட்சியினரும், பிற எதிர்க்கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X