For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸை பாடாய் படுத்தும் முலாயம்-லாலு

By Sridhar L
Google Oneindia Tamil News

Mulayam Singh Yadav and Lalu Prasad
டெல்லி: கூட்டணி விஷயத்தில் காங்கிரஸை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் ரொம்பவே நோகடித்து வருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைப்பதற்காக சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளை கேட்டதற்கு சமாஜ்வாடி கட்சி 15 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து கூட்டணி முறிந்ததாக இரு தரப்பும் அறிவித்துவிட்டன.

அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 74 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளுக்கும் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

மறுபடியும் பேசலாம்-முலாயம்:

இந் நிலையில் காங்கிரசுடன் பேச்சு நடத்த தயார் என்று முலாயம் சிங் யாதவ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,

காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் பேச்சு நடத்த நாங்கள் தயார். ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சோனியா தான். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அவரது கட்சித் தலைவர்களிடம் விடாமல், எல்லா முடிவுகளையும் சோனியாவே எடுக்க வேண்டும்.

அவர் முதலில் உத்தரப் பிரதேசத்தில் தனது கட்சியின் பலத்தைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

என்னத்த பேச?-காங்கிரஸ்:

ஆனால் சமாஜ்வாடி கட்சியுடன் இனி பேச்சே கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் கூறிவிட்டார்.

பெரும்பாலான தொகுதிகளுக்கு சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் அந்தக் கட்சியுடன் போய் இனிமேல் என்ன பேசுவது என்றார் சிங்.

லாலு படுத்திய பாடு:

அதே போல லாலு தங்களை கைவிட மாட்டார் என காங்கிரஸ் நினைத்திருந்த நிலையில் அவரும் அந்தக் கட்சியை படாதபாடு படுத்திவிட்டார்.

பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தனக்கு 25 தொகுதிகளையும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்திக்கு 12 இடங்களையும் ஒதுக்கிவிட்ட லாலு, காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி அந்தக் கட்சியின் மானத்தையே வாங்கிவிட்டார்.

2004 தேர்தலில் லாலு கட்சி 26 இடங்களிலும், பாஸ்வான் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரசுக்கு 4 தொகுதிகளும் தேசியவாத காங்கிரசுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் அந்தக் கூட்டணி வென்றது.

பாஸ்வானிடம் சரண்டரான லாலு:

ஆனால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் பாஸ்வானுக்கு அதிக இடங்கள் ஒதுக்க லாலு மறுத்தார். இதனால் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டார். இதனால் லாலுவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது.

இந்தமுறை பாஸ்வானை விட்டுவிடக் கூடாது என்பதால் தனக்கு ஒரு தொகுதியைக் குறைத்துக் கொண்டு அவரது கட்சிக்கு 12 இடங்களை ஒதுக்கிவிட்டார் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் காங்கிரசுக்கு கடந்த முறை 4 இடங்களைத் தந்த லாலு இம்முறை அதை 3 ஆகக் குறைத்துவிட்டார். இதனால் சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து லாலுவுடனான கூட்டணியை உடைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் தயாராகிவிட்டது.

வெட்கமாக இருக்கிறது.. காங்கிரஸ்:

அந்த மாநில வேட்பாளர் தேர்வு கமிட்டி பொறுப்பாளரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கள் கட்சியின் தொண்டர்களின் முகத்தை எப்படி பார்ப்பது என்று கூட தெரியவில்லை.

இதனால் நாங்களாகவே எத்தனை தொகுதிகளில் முடியுமோ அத்தனை தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து விட்டோம் என்றார். இதன்மூலம் கூடுதல் இடங்களைத் தராவிட்டால் காங்கிரஸ்- லாலு, பாஸ்வான் கூட்டணி உடையும் எனத் தெரிகிறது.

ஆனால், கூட்டணி உடைந்தால் அது முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு லாபமாகிவிடும் என்பதால் காங்கிரஸ் கட்சியில் பயமும் நிலவுகிறது.

இதனால் லாலுவுடன் மீண்டும் பேசலாம் என மூத்த தலைவர்கள் சோனியாவிடம் கூறி வருகின்றனர்.

காங்கிரசில் லாலுவின் மச்சான்:

இதற்கிடையே தேர்தலில் போட்டியிட தனக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலு பிரசாத்தின் மைத்துனரும், எம்பியுமான சாது யாதவ் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

பாஸ்வான் முன்பாக லாலு மண்டியிட்டு விட்டதாக அவர் விமர்சித்துளளார்.

இது எப்டி இருக்கு?...

இவ்வாறு உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் காங்கிரஸ் கேவலப்பட்டு நிற்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் நிருபர்களிடம் கூறுகையில், பிகாரில் 3 தொகுதிகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் உத்தரப் பிரதேசத்தில் கொடுக்கும் 17 தொகுதிகளை ஏற்க முடியாதா?. காங்கிரசை சந்தோஷப்படுத்தும் கலையை நாங்கள் லாலுவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி எரியும் நெருப்பில் எண்ணெயையை ஊற்றியுள்ளார்.

வி.பி.சிங் மகன் போட்டி:

இதற்கிடையே உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன் அஜயசிங் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

பதேபூர் தொகுதியில் தான் வி.பி.சிங் பலமுறை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X