For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்- உயர்நீதிமன்ற விசாரணை-முழு விவரம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், தற்காலிக தலைமை நீதிபதியிடம் உயர்நீதிமன்றத்திற்குள் போலீசார் உள்ளே வர அனுமதி பெற்றதற்காக இதுவரை எந்த ஆதாரத்தையும் அரசு தாக்கல் செய்யவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்து வக்கீல்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதி முகோபாத்யாயா, தனபாலன், சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வக்கீல்கள் தரப்பில், மூத்த வக்கீல்கள், கிருஷ்ணமூர்த்தி, சோமையாஜி, டி.வி.ராமானுஜன், ஆர்.வைகை, என்.ஆர்.சந்திரன், வக்கீல்கள் சங்க தலைவர்கள் பால்கனகராஜ், பிரபாகரன், கிருஷ்ணகுமார் உள்பட பலர் ஆஜராகி வாதாடினார்கள்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணை விவரம்...

நீதிபதி முகோபாத்தியா: எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, 2 வாரமாக மருத்துவ சிகிச்சை பெற்றது உங்களுக்கு தெரியும். இன்னும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அவசரம் கருதி இங்கே வந்துவிட்டேன். உங்கள் கவுரவம் மட்டுமல்லாமல், நீதிமன்ற கவுரவமும் அடங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 19-ந் தேதி, 21-ந் தேதி ஆகிய நாட்களிலும், கடந்த 2-ந் தேதியும் நாங்கள் விசாரித்து இந்த வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரணை செய்து இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. அதை ஏற்பீர்களா? என்று எனக்கு தெரியாது. மத்திய-மாநில அரசு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவர்களை பொறுத்தது. ஆனால், இக்கோர்ட்டு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். இதற்கு நீங்கள் தேவையான அபிடவிட் மனுக்களை தாக்கல் செய்யுங்கள்.

அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி:- இந்த வழக்கில் ஆஜராக சீனியர் வக்கீல் ராஜூ தவானை அழைக்க உள்ளோம். எனவே அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். இந்த நிலையில், வக்கீல்கள் பேரணி நடத்துகிறார்கள். இது தேவையற்றது. தேவையில்லாத பிரச்சினை ஏற்படலாம்.

பால்கனகராஜ்: வக்கீல்களை ஒன்றுபடுத்தவே இந்த பேரணி நடத்தப்படுகிறது. எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். ஆனால் அமைதியாகவே பேரணி நடைபெறும்.

டி.வி.ராமானுஜன்: ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் வரம்புக்கு இல்லாத விஷயங்களை விசாரித்துள்ளது. வக்கீல்கள் மீது கூறப்பட்ட தேவையற்ற கருத்துக்களை நீக்கவேண்டும்.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி: மாலை 3.30 மணி முதல் போலீசார் தாக்குதலை நடத்தினார்கள். கோர்ட்டு வராண்டாக்களிலும், முதல் மாடிக்கும் சென்று வக்கீல்கள் மட்டுமல்லாமல், கோர்ட்டு ஊழியர்களையும் தாக்கினார்கள். குழந்தைகள் காப்பகத்திற்குள் சென்றும் சேதத்தை ஏற்படுத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினார்கள்.

சமரசம் செய்ய முயன்ற நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனை லத்தியால் தாக்கியதால் அவர் காயம் அடைந்தார். அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதி அனுமதியில்லாமல் போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் வக்கீல்கள் மட்டும் காயம் அடைந்தது மட்டுமல்லாமல், கோர்ட்டின் சொத்துக்களும், வாகனங்களும் சேதம் அடைந்தன.

கற்பழித்து விட்டனர் ..

1952 முதல் கோர்ட்டில் நான் வக்கீல் தொழில் செய்து வருகிறேன். நான் இதுவரை இதுபோன்ற சம்பவத்தை பார்த்ததில்லை. நீதித்துறையையும், நீதிமன்றத்தையும் பெண்ணோடு ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பெண்ணை கடந்த மாதம் 19-ந் தேதி போலீசார் மானபங்கப்படுத்தி, கற்பழித்து உருக்குலைத்துவிட்டனர்.

இது ஜீரணிக்க முடியாதது, நமது வீட்டுக்குள்ளே இது நடந்துள்ளது. ஆகவே, இக்கோர்ட்டு தக்க உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

நீதிபதி முகோபாத்தியா: எந்த மாதிரி உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆர்.கிருஷ்ணமூர்த்தி: யார் அனுமதி தந்தார்கள் என்பது தான் கேள்வி? முன்கூட்டியே முடிவு செய்து வக்கீல்கள் தாக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டுக்குள் வர யார் அனுமதி தந்தார்கள், அடிக்க யார் உத்தரவிட்டார்களோ அந்த போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்யவேண்டும்.

நியாயமான விசாரணை நடத்த இதை செய்தாக வேண்டும். இதுமட்டுமல்லாமல், போலீஸ் பாக்கெட் டைரி, செல்போன் பேச்சு போன்ற விவரங்களை தாக்கல் செய்யவேண்டும்.

வக்கீல் சோமையாஜி: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தற்காலிக வேலைநீக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு.

வக்கீல் ஆர்.வைகை: நியாயமான விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். விசாரணை நடக்கும் வேளையில் அவர்கள் பணியில் இருக்க கூடாது. தவறான விசாரணை நடக்காமல் இருக்க இவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யவேண்டும்.

வக்கீல் என்.ஆர்.சந்திரன்: அரசியல் சட்டம் 21-வது பிரிவு மீறப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது எந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்தார்கள் என்பது வீடியோ பதிவில் தெளிவாக தெரிகிறது. ஆகவே, அவர்களை தற்காலிக வேலைநீக்கம் செய்ய வேண்டும்.

அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி: இந்த வழக்கிற்கு பிற்பகலில் அறிக்கையை சமர்ப்பிக்கிறோம்.

நீதிபதி முகோபாத்தியா: அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றார்.

பின்னர் வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைப் பரிசீலித்த நீதிபதிகள் ஒரு உத்தரவைப் பிறப்பித்தனர். அதன் விவரம்...

கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக, அதே நாளில் ஐகோர்ட்டே முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மேற்கொண்டோம். கடந்த மாதம் 19-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் கடந்த 2-ந் தேதி ஆகிய நாட்களில் தேவையான உத்தரவை பிறப்பித்தோம்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் என்ன நடந்தது என்பது பற்றி அறிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

இந்த கமிஷன் எதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும், அப்பொழுது தற்காலிக தலைமை நீதிபதியையும், அட்வகேட் ஜெனரலையும், வக்கீல்கள் சங்க தலைவர்களையும் பேசி முடிவெடுத்து கமிஷன் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆயுதம் தாங்கிய போலீசாரை ஐகோர்ட்டுக்குள் நுழைய அனுமதித்தது யார்? அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் விசாரிக்கும்படி கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த கமிஷனும் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது. அறிக்கை குறித்து முடிவு எடுக்கவும், மேற்கொண்டு விசாரணை நடத்தவும், விரும்பிய நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி இங்கு விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு பல வக்கீல் சங்கங்களும், சம்பவம் தொடர்பாக மனுக்களை தாக்கல் செய்தன. கோர்ட்டு உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டில் வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்றும் வக்கீல் சங்கங்கள் இக்கோர்ட்டில் தெரிவித்தன. போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தெரிவிக்கவில்லை என்றும், ஆயுதம் தாங்கிய போலீசாரை ஐகோர்ட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் வக்கீல் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

உண்மை விவரங்களை விசாரணை கமிஷன் தவிர்த்துள்ளது என்றும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டால்கூட, போலீஸ் அத்துமீறல் தெளிவாக தெரிகிறது என்றும் வக்கீல்கள் வாதாடுகையில் தெரிவித்தனர். தற்காலிக தலைமை நீதிபதி அனுமதியில்லாமல் ஆயுதம் தாங்கிய போலீசார் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் எடுத்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் அரசிடமிருந்து பதில் வந்ததும், முடிவெடுக்கலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். யார் உத்தரவின்பேரில், கோர்ட்டு வளாகத்திற்குள் சில வக்கீல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது? லத்திசார்ஜ் நடத்தப்பட்டது? என்று ஏற்கனவே அரசிடம் கேள்வி கேட்டோம். இதற்கு காரணமான அதிகாரிகள் பெயரை கேட்டிருந்தோம்.

ஸ்ரீகிருஷ்ணா விசாரணை கமிஷன் மற்றும் ஐகோர்ட்டு என்ன சொல்கிறதோ அதை விரைவாக மாநில அரசு பின்பற்றும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த உத்தரவாதம் வழங்கப்பட்ட பிறகும், இந்த வழக்கில் மாநில அரசு எந்த பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. அறிக்கை தாக்கல் செய்ய பகல் 2.30 மணி வரை அட்வகேட் ஜெனரல் அவகாசம் கேட்டார். பிற்பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் பெயரில் அபிடவிட்' மனுவை இக்கோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையும், கமிஷன் அறிக்கையையும் குறிப்பிட்டுவிட்டு மாலை 4 மணிக்கு கல்' எறிதல் நடந்தது என்றும், கார்களும், இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன என்றும், இதனால் போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏட்டுக்கு மர்ம உறுப்பில் காயம்..

ஏட்டு கிருஷ்ணகுமாரின் மர்ம உறுப்பில் வக்கீல்கள் கல் எறியப்பட்டதால் உடனடியாக அவர் மயக்கம் அடைந்தார் என்றும், நிலைமையின் கடுமையையும், பாதுகாப்பையும் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்பட்டதால் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்க அந்த இடத்தில் இருந்த சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர், மற்ற அதிகாரிகளான வடசென்னை, மத்திய சென்னை இணை கமிஷனர்கள், பூக்கடை, புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர்கள் ஆகியோருடன் பேசி, கூடியிருந்த கூட்டம் சட்டவிரோதமான கும்பல் என்று முடிவு செய்தனர் என்றும், இதைத்தொடர்ந்து பூக்கடை துணை கமிஷனர் குறைந்தபட்ச தடியடியை பயன்படுத்தி கலைக்க முற்பட்டார் என்றும் அந்த பதில் மனுவில் போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை, அட்வகேட் ஜெனரல் சுட்டிக்காட்டி எல்லா சங்கங்களும் கோரிக்கை விடுக்கப்பட்டாலும், அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால், வக்கீல் சங்கங்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமா? என்ற கேள்வி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனுக்கு அனுப்பப்பட்டது என்றும், அந்த கமிட்டி இதுகுறித்து மவுனம் சாதித்ததால் இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதாக தெரிவித்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்டோம்.

இந்த நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று இக்கோர்ட்டு கருதுகிறது. கோர்ட்டுக்குள் போலீசார் உள்ளே நுழைய யார் அனுமதி வழங்கினார்கள், தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? என்று கேட்டிருந்தோம். இந்த அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்க இக்கோர்ட்டு முடிவு செய்திருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஐகோர்ட்டும், ஸ்ரீகிருஷ்ணா கமிஷனும் எந்த கருத்து தெரிவித்தாலும், அதை விரைவில் அமல்படுத்துவோம் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால், இன்றுதான் சென்னை போலீஸ் கமிஷனர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அடங்கிய அபிடவிட்' மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் அந்த அதிகாரிகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்தபோது, கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என்றும், ஆயுதம் தாங்கிய கலவரம் போன்ற நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று கருதி இருந்தால், தற்காலிக தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும், அவரிடம் போலீசார் நிலைமை குறித்து விளக்கி கூறியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆதாரத்தை அரசு தாக்கல் செய்யவில்லை..

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், தற்காலிக தலைமை நீதிபதியிடம் போலீசார் உள்ளே வர அனுமதி பெற்றதற்காக இதுவரை எந்த ஆதாரத்தையும் அரசு தாக்கல் செய்யவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அடிப்படை முகாந்திரம் உள்ளது.

ஆகவே, கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) ஏ.கே.விஸ்வநாதன், சென்னை வடக்கு இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணி ஆகியோரின் மேற்பார்வையில் சம்பவம் நடந்திருப்பதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இதற்காக அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

ஏனெனில், சம்பவ இடத்தில் இருந்த இரு உயர் அதிகாரிகள் இவர்கள்தான். மேலும் நேரடியாக கண்காணித்து சம்பவத்தை நடத்தியவர்கள் ஆவார்கள் என்று நீதிபதிகளின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X