For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பீனிக்ஸ்'-தனக்கு தானே ராமதாஸ் சமாதானம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவினர் பணத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அள்ளி விதைத்துள்ளனர். அதற்கான அறுவடையை செய்துள்ளனர். இந்தத் தோல்வியால் துவண்டு விடாமல் பீனிக்ஸ் போல எழும் பாமக என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களிலும் மரண அடி வாங்கியுள்ளது பாமக. இது அந்தக் கட்சி கனவில் கூட நினைத்திருக்காத பாடம்.

இந்த தோல்வி குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆளும் கட்சியினர் தாங்கள் குவித்திருந்த கோடிகளில் சில கோடி ரூபாய்களையும், தேர்தல் விதிகளை மீறி; ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அரசாங்க பணத்தையே செலவிட்டு வசதிகள் செய்திட சில கோடி ரூபாய்களை செலவழித்ததும் போதாமல்; அடிப்பதுபோல் அடி, நாங்கள் அழுவதுபோல் அழுது எங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம் என்ற சூழ்ச்சியில் ஈடுபட்டும் - வாக்காளர்களுக்கு நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை வழங்கியும் இந்த வெற்றியை பெற முடிந்தது என்ற உண்மை, வாக்களித்தவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களை வாழ்த்துகிறவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

- சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தோல்வியடைந்தபோது, அதன் தலைவர் தெரிவித்த கருத்துகள் தான் இவை.

இப்போது மக்களவைத் தேர்தலில் திமுக அடைந்திருக்கும் வெற்றிக்கு, அதிலும் குறிப்பாக பாமக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கும் வெற்றிக்கு அவர் அன்று சொன்ன வார்த்தைகள் அப்படியே பொருந்தும். இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்றிருக்கிறது; பணநாயகம் வென்றிருக்கிறது.

வேறு யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை - பாமக வேட்பாளர்களை மட்டும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்; எதை வேண்டுமானாலும் செய்து இந்த காரியத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற கட்டளையுடன் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அமைச்சர்களும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பண மூட்டைகளுடன் களமிறக்கப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சராசரியாக 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஏறக்குறைய பாதி தொகுதிகளில் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது. சில தொகுதிகளில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

அப்படி 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவான தொகுதிகளில் பாமக போட்டியிட்ட 5 தொகுதிகள் உள்ளன என்பதிலிருந்து பாமகவை எந்த அளவுக்கு குறிவைத்து வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுத்து, கோடிகளை கொட்டியும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் ஆளும் கட்சியினர் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

பாமக போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுத்தார்கள் என்று சொல்லுவது மிகச் சாதாரணம். பணத்தை அள்ளி வீசி விதைத்திருக்கிறார்கள்- விதைத்த அளவுக்கு அறுவடை செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

காவல்துறை, அரசு அலுவலர்கள் நடுநிலை தவறி விட்டனர்..

நடுநிலையாக இருக்க வேண்டிய காவல்துறையினரும், அரசு அலுவலர்களும் திமுகவினருக்கு துணை போயிருக்கிறார்கள்.

ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தது 50 கள்ள வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி தான் வெற்றி பெறப்போகிறது என்ற ஒரு பரப்புரை இந்த தொகுதிகளில் காவல் துறையினராலும், அரசு அலுவலர்களாலும் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது.

கள்ள வாக்குகளை பதிவு செய்வதற்கான முன்னோடியாகவே இத்தகைய பரப்புரை முன்கூட்டியே நடத்தப்பட்டிருக்கிறது என்று உணர முடிகிறது. இப்படியெல்லாம் முறைகேடுகளை செய்து ஆளுங்கட்சியினர் தட்டிப் பறித்துள்ள இந்த வெற்றி உண்மையானதல்ல. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி நிலையானதும் அல்ல.

நாளை இறங்கித்தான் ஆக வேண்டும்...

வாழ்க்கை ஒரு சக்கரம். இன்று மேலே இருப்பது நாளை கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். பல்வேறு முறைகேடுகளை செய்து ஆளும் கட்சி பணபலத்தால் பெற்றுள்ள இந்த வெற்றியினால் ஏற்பட்டுள்ள தற்காலிக தோல்வியைக் கண்டு பாமகவினர் சோர்ந்துவிட மாட்டார்கள்.

நாளைய வெற்றிக்கு இதை படிகட்டுகளாக எடுத்துக்கொண்டு பீனிக்ஸ்' பறவையைப் போல பாமக அரசியலில் மீண்டும் எழும்; வெற்றிநடை போடும் என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X