For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முள்ளிவாய்க்காலில் இறுதி தாக்குதல்-எங்கும் மரண ஓலம்

By Staff
Google Oneindia Tamil News

வன்னி: விடுதலைப் புலிகள் வசம் மிஞ்சியுள்ள மிகச் சிறிய பகுதியில் இன்று காலை முதல் இலங்கை ராணுவம் நாலாபுறமும் சுற்றி வளைத்து கனரக பீரங்கிகள் மூலம் இறுதித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக, அந்தப் பகுதியில் இருந்து புதினம் இணையத் தள செய்தியாளர் கண்ணீர் மல்க செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இந்த செய்திதான் தனது கடைசி செய்தியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளதாக புதினம் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதினம் இணையத் தளம் வெளியிட்டுள்ள அந்த செய்தி..

பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.

கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன.

தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.

காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.

விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - இலங்கைப் படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைக் கொண்டும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோருடைய உடல்களும் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.

திரும்பிய பக்கம் எல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.

இன்றே அனைவரும் இரையாகி விடுவார்கள்..

இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே இலங்கைப் படையினருக்கு இரையாகிவிடுவர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.

படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.

அதேபோல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு சயனைட் குப்பிகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.

பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காக்க பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.

இவ்வாறு கூறிய எமது செய்தியாளர், கடைசியாக -இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பும் - யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது - மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

2003ம் ஆண்டில் இருந்து புதினம் நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து வந்த அந்த செய்தியாளர், கடைசியாக -என்னுடன் உங்களுக்கு இருக்கும் தகவல் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X