For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 மாத கொல்கத்தா குழந்தைக்கு புத்துயிர் தந்த சென்னை டாக்டர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிறந்து நான்கு மாதமே ஆன தனிஷா என்ற குழந்தைக்கு, சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய அறுவைச் சிகிச்சை செய்து அந்தக் குழந்தைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

மலர் மருத்துவமனையைச் சேர்ந்த தலைமை இருதயவியல் நிபுணரான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான டாக்டர்களே இந்தப் பெருமைக்குரிய செயலை செய்துள்ளனர்.

தங்களது குழந்தையின் உயிரைக் காத்த இந்த டாக்டர்கள், கடவுளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்று தனிஷாவின் பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

தனிஷாவின் சிகிச்சைக்காக வெறும் அறுவைச் சிகிச்சையோடு நின்று விடாமல், அதற்குத் தேவையான ரூ. 1.5 லட்சம் நிதியையும் சென்னை டாக்டர்களே திரட்டியும்
கொடுத்து உதவியுள்ளனர்.

தனிஷாவுக்குத் தேவையான அனைத்தையும் மலர் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அழகிய ரோஜாப் பூவைப் போல தனிஷாவை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் சென்னை டாக்டர்கள்.

தனிஷாவுக்கு சயனோட்டிக் கான்ஜெனிட்டல் என்ற இருதய குறைபாடு பிறவியிலேயே இருந்துள்ளது. இந்த பிரச்சினை இருதயத்தின் வலது பக்கத்தில் ஏற்படும். இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்குகையில், தனிஷாவின் வலது பக்க நுரையீரல் சரியாக வளரவில்லை. இது மிகவும் அரிதான கேஸாகும்.

இது மிகவும் வழக்கத்திற்கு விரோதமானது, இதை நாங்கள் சிமிட்டர் சின்ட்ரோம் (Scimitar Syndrome) என்று கூறுவோம்.

குழந்தைகளுக்கு கான்ஜெனிட்டல் இருதயக் கோளாறு ஏற்பட்டால் ஒரே வருடத்தில் உயிரிழப்பு ஏற்படும். பிறந்து ஒரு வருடத்தில் இறக்கும் குழந்தைளுக்கு பெரும்பாலும் இந்தப் பிரச்சினைதான் இருக்கும்.

எனவே குழந்தை பிறந்தவுடன் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்யப்பட வேண்டியது அதை விட அவசியம். இல்லாவிட்டால் அது உயிரிழப்பில் போய் முடிந்து விடும் என்றார்.

ஏப்ரல் 7ம் தேதி தனிஷாவுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.

குழந்தை தனிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு ரத்த அழுத்தம் 120 எம்.ஜி என்ற அபாயகர அளவில் இருந்தது. தனிஷா வயதிலான குழந்தைக்கு 20 எம்.ஜி.தான் இருக்க வேண்டும்.

இதையடுத்து வயாகரா, சில்டன்பிரில் ஆகியவற்றைப் பயன்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைத்துள்ளனர். அதன் பின்னர் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாம்.

தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், எங்களது பங்கு அறுவைச் சிகிச்சை மட்டுமே. ஆனால் குழந்தை 40 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தபோது அதை கண்ணும் கருத்துமாக, கவனத்துடன் பார்த்துக் கொண்ட செவிலியர்களின் பணிதான் மிகப் பெரியது என்று மருத்துவமனை செவிலியர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

இன்று தனிஷா ஆரோக்கியமாகவும், அழகாகவும், புன்னகை பூத்தபடி பெற்றோரின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள். பெற்றோரின் கண்களில் ஆனந்தம் பிளஸ் நிம்மதி தவழ்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X