For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வெள்ள பெருக்கை தடுக்க ஜிபிஎஸ்- சாப்ட்வேர் உதவியோடு ரூ.1,448 கோடி திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: சென்னை நகரில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த ஜிபிஎஸ் மற்றும் சாப்ட்வேர் உதவியோடு நவீன திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,448 கோடி செலவில் இத் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.

சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீது 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். 2வது நாளான இன்று நடைபெற்ற விவாதத்தில் 4 உறுப்பினர்கள் பேசினர்.

உறுப்பினர்களின் கருத்துகளுக்கு துணை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார். துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது அவர் முதல் முறையாக இன்று பதிலளித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரது பதிலுரையை காண தாயார் தயாளு அம்மாள், மனைவி சாந்தா, தங்கை கனிமொழி உள்ளிட்டோர் சட்டமன்றப் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்தனர்.

ஸ்டாலின் அளித்த பதிலுரை:

சென்னை மாநகரில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக, மாநகராட்சி ஒரு விரிவான திட்டம் தயாரித்துள்ளது. இத்திட்டம் புவியியல் தகவல்முறை (GPS) மற்றும் மழை நீர் வடிகால்வாய் மேலாண்மை மென்பொருள் போன்ற நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பொதுப் பணித்துறையுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 1,448 கோடி. மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தால் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் இத் திட்டத்துக்கு தொகை ஒதுக்கப்பபட்டுள்ளது. இந்தப் பணியில் சென்னை மாநகராட்சியின் பங்கீடு ரூ. 815 கோடி ஆகும்.

இத்திட்டம் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணிகள், பழமையான கால்வாய்களை இடித்து புதுப்பிக்கும் பணிகள் மற்றும் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் நீர்வழி கால்வாய்களில் சிமெண்ட் கான்கீரிட் தரை மற்றும் சுவர் கட்டும் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மூன்றாண்டுகளில் படிப்படியாக இத் திட்டம் நிறைவேற்றப்படும்.

சென்னையில் 186 குடிசைப் பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல், மழை நீர் வடிகால்வாய்கள் கட்டுதல், அங்கன்வாடிகள், சமையல் கூடங்கள், உடற்பயிற்சி கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், புதிய தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை அளிக்கும் பொருட்டு ரூ. 72.63 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 18 மாதங்களில் முடிவு பெறும்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,200 ஊரக குடியிருப்புகளுக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் 4,20,000 மக்கள் பயன்பெறும் வகையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கான வைகை அணை மற்றும் பேரணை மதகிற்கிடையில் அமையப் பெற்றுள்ள 8 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.74.00 கோடி மதிப்பீட்டில் 6,12,000 மக்கள் பயன்பெறும் வகையில், குழாய் மூலம் குடி நீர் கொண்டும் செல்லும் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், மற்றும் 64 வழியோரக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் விரிவான மதிப்பீடு ரூ.1,400 கோடிக்கு தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகளை மேம்படுத்திட 100 உதவிப் பொறியாளர்கள், 100 இளநிலை உதவியாளர்கள், 60 சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் மற்றும் 7 உதவி நிலநீர் வல்லுனர் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.

திருச்செந்தூரில் ரூ.11.92 கோடி செலவில் தனி குடிநீர்த் திட்டம் அமலாக்கப்படும். இத் திட்டத்தின் கீழ் 31,800 மக்கள் பயன் பெறுவார்கள்.

இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் உள்ளாட்சித்துறை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய அளவி்ல் தமிழ்நாடு இந்தத் துறையில் தொடர்ந்து முதல் 4 இடங்களில் இருந்து வருகிறது.

தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக 13வது நிதிக்கமிஷன் புகழ்ந்துரைத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒருநாள் பணிக்கான கூலி ரூ.80ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஊதியம் பெறும் நாட்களை 100லிருந்து 150 நாட்களாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டில் புதிதாக 30 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X