For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஎம் பொலிட்பீரோவிலிருந்து அச்சுதானந்தன் நீக்கம் - விஜயன் மீது நடவடிக்கை இல்லை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: கேரள முதல்வர் அச்சுதானந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது பரம வைரியான பினரயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முதல்வர் பதவியில் அச்சுதானந்தன் தொடர்ந்து நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியையே விஞ்சும் அளவுக்குப் போய் விட்டது அச்சுதானந்தன், விஜயன் கோஷ்டி மோதல். இந்த மோதல் சமீபத்தில் லாவலீன் ஊழல் வழக்கு விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநில மின்சார துறை மந்திரியாக பதவி வகித்தார் விஜயன். அப்போது லாவலீன் என்ற நிறுவனத்திற்கு காண்டிராக்ட் கொடுத்ததில் ரூ. 374 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் விஜயன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநர் கவாயை அணுகியது சிபிஐ. அதற்கு சமீபத்தில் ஆளுநர் அனுமதி அளித்தார்.

இதனால் விஜயன் ஆதரவாளர்கள் வெகுண்டனர். அச்சுதானந்தன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் கோஷ்டியினருக்கு இடையே இருந்து வந்த மோதல் மேலும் தீவிரம் அடைந்தது. இது லோக்சபா தேர்தலில் எதிரொலித்தது. மாறி மாறி இரு தரப்பினரும் குழி பறித்ததால் சிபிஎம் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.

இதையடுத்து இந்த விவாகரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தால்தான் கேரளாவில் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்பதால் கடந்த வாரம் 2 நாள் பொலிட்பீரோ கூட்டத்தை சிபிஎம் கூட்டியது. இக்கூட்டத்தில், அச்சுதானந்தன், விஜயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என மட்டும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை மத்திய கமிட்டிக்கு அனுப்பி வைத்தது பொலிட்பீரோ.

இந்த நிலையில், நேற்று கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில், அச்சுதானந்தனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. கோஷ்டிப் பூசலுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கடும் வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் ஒரு சுமூக முடிவை கட்சி மத்திய குழு எடுத்தது. அதன்படி, அச்சுதானந்தன் வசம் உள்ள முதல்வர் பதவியை அப்படியே விடுவது. அதற்குப் பதிலாக பொலிட்பீரோ மற்றும் மத்திய கமிட்டி உறுப்பினர் பதவிகளை விட்டு நீக்கி விடுவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த யோசனையை முன் வைத்தவர் கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.

அச்சுதானந்தன் புறக்கணிப்பு

இந்த நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தை அச்சுதானந்தன் புறக்கணித்தார்.

அவர் இல்லாத நிலையில் கூடிய கூட்டத்தில் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பிலிருந்து அச்சுதானந்தனை நீக்கி வைப்பது என மத்திய குழு முடிவு செய்தது.

அதேசமயமம், சட்டமன்றத் தேர்தல் முடிய அச்சுதானந்தனே முதல்வர் பதவியில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அவரது வைரியான பினரயி விஜயன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து கேரள மாநில செயலாளர் பதவியில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X