For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆக. 9ம் தேதி பெங்களூரில் வள்ளுவர், 13ல் சென்னையில் சர்வஞ்னர் சிலைகள் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெரும்புலவர் திருவள்ளுவரின் சிலை மற்றும் கன்னடக் கவிஞர் சர்வஞ்னர் ஆகியோரின் சிலைகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் 9ம் தேதி வள்ளுவர் சிலையும், 13ம் தேதி சென்னையில் சர்வஞ்னர் சிலையும் திறக்கப்படவுள்ளன.

பெங்களூர் அல்சூரில் ஏரிக்கரையோரம், பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 1991ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சிலையைத் திறக்கும் நேரத்தில் கன்னட அமைப்புகள் பெரும் போராட்டத்தில் குதித்ததால் சிலை திறப்பு நின்று போனது. பின்னர் சிலையை சாக்கைக் கொண்டு மூடி வைத்தனர். இன்று வரை அதே நிலையில்தான் உள்ளது திருவள்ளுவர் சிலை.

கடந்த 18 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வள்ளுவர் சிலைக்கு விடிவு காணும் வகையில் கன்னடக் கவிஞரான சர்வஞ்னரின் சிலையை சென்னையில் நிர்மானிக்க அனுமதி தருவது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி அயனாவரத்தில் உள்ள கன்னட சங்க வளாகத்தில் இந்த சிலை நிறுவப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் சென்னை வந்திருந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து இதுகுறித்து விவாதித்தார். அப்போது வள்ளுவர் சிலைத் திறப்புக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். திறப்பு விழாவுக்கு தேதியும் கேட்டு விட்டுச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் கருணாநிதி, எதியூரப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஆகஸ்ட் 9ம் தேதியன்று வள்ளுவர் சிலைத் திறப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

மேலும், ஆகஸ்ட் 10 அல்லது 13ம் தேதி சென்னையில் சர்வஞ்னர் சிலைத் திறப்பை வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆகஸ்ட் 9ம் தேதி வள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. 13ம் தேதி சர்வஞ்னர் சிலை சென்னையில் திறக்கப்படும் என எதியூரப்பாவின் செயலாளர் பிங்கேஷ் தெரிவித்துள்ளார்.

18 வருடங்களாக சாக்குப் பையில் முடங்கிப் போயிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிலைக்கு விடிவு பிறந்துள்ளது.

சர்வஞ்னர் யார்..?

சமஸ்கிருதத்தில் அனைத்தும் அறிந்தவன் என்ற பொருள் படுவதே சர்வஞ்னர் என்ற பெயராகும். இவர் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞர் ஆவார்.

மூன்று வரிகளில் கவிதை பாடியவர். இவற்றுக்கு வாச்சனா என்று பெயர்.

சர்வஞ்னர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரியவில்லை. மேலும் நிறையப் பேருக்கு இவர் குறித்த தகவல்கள் முழுமையாக தெரியாது. அவருடைய பாடல்கள், அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் உள்ளிட்டவற்றை வைத்து இவர் 16ம் நூற்றாண்டின் முதல் பாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவரது உண்மையான பெயர் புஷ்பதத்தா என்றும் கூறப்படுகிறது. புனை பெயராகத்தான் சர்வஞ்னர் என்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவருடைய தந்தை பிராமணர் ஆவர். தாயார் சூத்திர வம்சத்தைச் சேர்ந்த விதவைப் பெண். அவரது பெயர் மாலி. தார்வார் மாவட்டத்தில் மாலியைச் சந்தித்த, சர்வஞ்னரின் தந்தை, அவரை மணந்து கொண்டார்.

சர்வஞ்னர் ஒரு துறவி. ஊர் ஊராக செல்லக் கூடியவர்.

இவர் மொத்தம் 2000 மூன்று வரிப் பாடல்களை இயற்றியுள்ளார். இருப்பினும் இத்தனைப் பாடல்களையும் இவரே எழுதவில்லை என்றும் வேறு சிலர் எழுதிய பாடல்களையும் சர்வஞ்னர் பாடல்களாக கருதுகிறார்கள் என்றும் ஒரு கூற்று உண்டு.

மதம் சார்ந்த, சமூக, நெறிகள் சார்ந்த பாடல்களையே இவர் எழுதியுள்ளார்.

சர்வஞ்னரின் படைப்புகளை திரட்டி, முழுமைப்படுத்தியவர் சென்னப்ப உட்டங்கி என்பவர். 1949ம் ஆண்டு இந்தப் பணியை அவர் செய்து முடித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X