ரயில்வே டிராக்கில் இரும்புத் தூண் விழுந்ததில் தொழிலாளர் பலி
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் மிகப் பெரிய இரும்புத் துண் தண்டவாளத்தில் விழுந்ததில், ஒரு ரயில்வே தொழிலாளி பலியானார். ரயில் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்தது.
சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ரெயில் நிலையத்தையொட்டி பின்னி நிறுவனத்தின் பழைய தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலை இப்போது இயங்கவில்லை. சினிமா படப்பிடிப்புகள் மட்டும் நடப்பது வழக்கம்.
தொழிற்சாலையின் முன் பகுதியில் ராட்சத இரும்பு தூண்கள் உள்ளன. இதனை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில் ஏறத்தாழ 20 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 60 அடி உயர ராட்சத கிரேன் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டது.
அப்போது, ஒரு இரும்பு தூண் திடீர் என்று சரிந்து, கிரேன் மீது விழுந்தது. பின்னர் அனைத்தும், அருகே உள்ள காம்பவுண்டு சுவர் மீதும், ரெயில் தண்டவாளத்தை ஒட்டியும் விழுந்தது.
இந்த திடீர் விபத்தில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நால்வரையும் மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் 25 வயதான பாபு என்ற தொழிலாளி மட்டும் உயிரிழந்தார். அவரது உடலை சில மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினர் மீட்டனர். மற்ற 3 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தண்டவாளத்திலும் இரும்புத் தூணின் பகுதிகள் சிதறிக் கிடந்ததால், மாற்றுப் பாதையில் ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக மின்சார லைன்கள் மீது இரும்புத் தூண் விழாததால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.