உயிர் உள்ளவரை அதிமுக தான்- ஓ.பி.

ஓ.பன்னீர் செல்வம் திமுகவுக்குத் தாவப் போவதாக சில பத்திரிக்கைளில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது கட்சிகள் தாவும் சீசன் என்பதால், குறிப்பாக திமுகவை நோக்கி ஏகப்பட்ட பேர் பாதயாத்திரை போல கிளம்பிக் கொண்டிருப்பதால் ஓ.பியும் அதிமுகவை விட்ட தாவப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் இதை பன்னீர் செல்வம் இன்று திட்டவட்டமாக மறுத்தார். அரசாங்கமே இப்படிப்பட்ட வதந்திகளை கிளப்பி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு தேனி மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
கடந்த மாதம் மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
முதல் முறையாக இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரன் பாலமுருகன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணவள்ளி முன்னிலையில் இன்று காலை ஆஜரானார்கள். இந்தவழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் வரவில்லை.
இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
பின்னர் வெளியில் வந்த பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு முதல்வர் பதவியும், பொருளாளர் பதவியும் தந்த பொதுச் செயலாளர் இதயதெய்வம் புரட்சித் தலைவியை விட்டு நான் பிரியப் போவதாக அரசாங்கமே பத்திரிக்கைகள் மூலமாக வதந்தி பரப்பி வருகிறது.
கடைசி வரை, எனது உயிர் உள்ளவரை அதிமுகவில்தான் கடைசி தொண்டனாகத்தான் இருப்பேன் என்றார் பன்னீர் செல்வம்.