விலை உயர்வு போதாது-பால் உற்பத்தியாளர்கள்
சென்னை: தமிழக அரசு அறிவித்த பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம் தருவதாகவும், எனவே இதை நிராகரித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தது. அதன்படி பசும்பாலுக்கு லிட்டருக்கு 2 ரூபாயும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பசும் பால் கொள்முதல் விலை உயர்வு திருப்தி தரவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.முகமுது அலி, பொதுச்செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.2-ம், எருமைப்பாலுக்கு ரூ.5-ம் கொள்முதல் விலையுயர்வை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. இந்த அறிவிப்பு, பால் உற்பத்தியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
கால்நடை தீவனங்களின் விலையும், கறவை மாடுகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பசும்பாலுக்கு ரூ.2 கொள்முதல் விலை உயர்வு என்பது எந்த வகையிலும் பலன்தராது. எருமைப்பாலுக்கு ரூ.5 உயர்வு என்பது வெறும் கண்துடைப்பே.
தமிழகத்தில் ஆவினுக்கு கொள்முதல் ஆகிற தினமும் சுமார் 25 லட்சம் லிட்டர் பாலில் 95 சதவீதத்துக்கு மேலாக பசும்பால் தான் கொள்முதல் ஆகிறது.
மேலும், கடந்த 2007-08-ல் பாலுக்கு கொள்முதல் விலை உயர்வு மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டுக்கு மட்டும் செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து கொள்முதல் விலை உயர்வு அரசு அறிவித்திருப்பதால், 6 மாதங்களில் கிடைக்க வேண்டிய கொள்முதல் விலை உயர்வு சுமார் ரூ.3,600-ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வழியில்லை.
எனவே, பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.4 கொள்முதல் விலை உயர்வு, மார்ச் மாதத்தில் இருந்து என அரசு அறிவித்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது உள்ள 8,012 கூட்டுறவு சங்கங்களில் 2 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் நிலை உள்ளது. இந்த சங்கங்களில் ஊழியர் சம்பளம், இதர செலவுகளுக்கு அரசு தரப்பில் எவ்வித உதவியும் இதுவரை இல்லை.
பால் உற்பத்தியாளர்கள் வழங்குகிற பாலில் 1 லிட்டருக்கு 50 காசு பிடித்தம் செய்து, 40 காசுகள் ஆரம்ப சங்கங்களுக்கும், மீதியுள்ள 10 காசுகள், மாவட்ட, ஒன்றியங்களுக்கும் என வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்த சங்கங்களின் செயல்பாட்டுக்கு கொள்முதல் செய்கிற பாலுக்கு 1 லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் மானியமாக அரசு வழங்கவேண்டும் என்ற எங்களது கோரிக்கையும் அமல்படுத்தவில்லை.
ஆரம்ப கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சுமார் 24 ஆயிரம் பணியாளர்களை அரசு நிரந்தரப்படுத்தி, சம்பள உயர்வை மானியத்துடன் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து பேசியும், பால் உற்பத்தியாளர்களையும், ஆரம்ப கூட்டுறவு சங்கங்களையும் பாதுகாக்கும் வகையில் அரசின் அறிவிப்பு இல்லை. எனவே, 25.8.09 முதல், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சென்ற மாதம் 22.7.09 அன்று அறிவித்த அதே விலையை மீண்டும் அறிவித்ததால், எங்களது சங்கம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஸ்டிரைக் காரணமாக பால் விற்பனை பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.