For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தி திணிப்புக்கு முயற்சி: ராமதாஸ்-வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss and Veeramani
சென்னை: தமிழகத்தில் மீண்டும் இந்தித் திணிப்புக்கான முயற்சி நடப்பதாக
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கூறியுள்ளனர். இதை முதல்வர் கருணாநிதி தடுத்து நிறுத்த வேண்டு்ம் என்றும் கோரியுள்ளனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பதுங்கியிருக்கும் இந்தி திணிப்பு' என்ற பூதம் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தலைகாட்ட தொடங்கிவிடுகிறது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று பண்டித நேரு அளித்த உறுதிமொழி, பின்னர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்ற பிரதமர்களால் உறுதி செய்யப்பட்டு இன்று வரையில் இந்தி திணிப்பு என்கிற ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கல்வி மாநாடு ஒன்றில் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி, மீண்டும் அந்த ஆபத்து தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

''இந்தி தேசிய மொழி; எனவே, நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அது கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்'' என்று கபில்சிபல் பேசியிருக்கிறார். இது அவரது சொந்தக் கருத்தா? அல்லது அவர் சாந்துள்ள அரசின் கருத்தா? என்பது தெரியவில்லை.

எதுவாக இருப்பினும், அவர் பேசியிருப்பதைப்போல, நாடு முழுவதும் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட இத்தகைய நடவடிக்கை உதவாது என்பது அவருக்கும், அரசுக்கும் உரிய முறையில் உணர்த்தப்பட வேண்டும்.

மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இந்தியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் நேருவின் உறுதிமொழியை தொடர்ந்து நிறைவேற்றி வர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து குரல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது.

அதேநேரத்தில், நேரு அளித்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இடம்பெற செய்வதில் தமிழகம் தவறியிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும்.

இந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் போட்டி அரசியலுக்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, இந்தி திணிப்பு என்ற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த உதவவில்லை என்பது இன்றைக்கும் நிதர்சனமான உண்மையாகும். இந்தி திணிப்பு என்கிற ஆபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கு இப்போது சிறந்ததொரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விரைவிலேயே கொண்டாடப்பட இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ சிறப்பான காரியங்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்கப்படுகிறது என்கிற அறிவிப்பினை பெற்று, அதன் மூலம் தமிழர்களின் தலைக்குமேல் பல்லாண்டு காலமாக தொங்கிக்கொண்டிருக்கும் இந்தி திணிப்பு' என்கிற கத்தியை அகற்றிவிட்டோம் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது அனைத்திற்கும் மேலான சிறப்பாக அமையும். அண்ணாவின் கொள்கையும் நிறைவேறும்.

அதற்கான முயற்சியை தமிழகத்தின் சார்பில் முதல்வர் உடனடியாக மேற்கொண்டு அந்த வெற்றி செய்தியிணை அண்ணா நூற்றாண்டு விழாவில் அறிவிக்கச் செய்து புகழ் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது-வீரமணி:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில்,

மத்திய அமைச்சர் கபில் சிபில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இது வருத்தமும், வேதனையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

இதன் மூலம் தமிழகத்தில் மறைமுகமாக இந்தி திணிப்பு நடைபெறும். இதை அனுமதிக்க முடியாது. 1926ம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பை பெரியார், அண்ணா உள்ளிட் தலைவர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

1967ம் ஆண்டு அண்ணா தலைமையிலான ஆட்சி மும்மொழிக் கொள்கையை ரத்து செய்து, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு காரணமே தமிழகத்தில் நடந்த மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம்தான்.

அந்த இந்தி திணிப்பில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால் தான் 1967ல் ஆட்சியை பறிகொடுத்து இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம்.

இந்தியை படிக்க விரும்புவர்கள் இந்தி பிரச்சார் சபா உள்ளிட் நிறுவனங்களில் படித்துக் கொள்ளலாம். கட்டாயமாக பள்ளிகளில் புகுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X