சிறுநீரக மோசடி-டாக்டர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
டெல்லி: சிறுநீரக மோசடியில் ஈடுபடும் டாக்டர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் முக்கிய சட்டம் திருத்தம் நிறைவேற்றப்பட உள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் மற்றும் குர்கான் நடந்த சிறுநீரக மோசடி சம்பவம் நாட்டையே குலுக்கியது.
இதையடுத்து 1994ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனித உடல் உறுப்புகள் மாற்று சிகிச்சை சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது.
இது குறித்த மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடந்தது. அதன் முடிவில் மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,
இந்த புதிய சட்டத்திருத்தத்தி்ன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் டாக்டர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு தண்டனை காலம் 7 ஆண்டு.
மாநில உடல் உறுப்பு சிகிச்சை அங்கீகார கமிட்டிகளிடம் சிறுநீரகம்யை பெறுபவர் வெளிநாட்டுக்காரராகவும், கொடுப்பவர் இந்தியராகவும் இருந்தால் அதற்கு அனுமதி வழங்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். இதனால் பலவீனமான ஏழை இந்தியர்களை காப்பாற்ற முடியும்.
ஆனால், இந்தியாவில் இருக்கும் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து வெளிநாட்டுக்காரர்கள் சிறுநீரகம் பெற்று கொள்ளலாம். அது தொடர்பாக அவர்கள் முறையான அனுமதி பெற வேண்டும்.
தாத்தா, பாட்டியும் தானம் வழங்கலாம்...
அதேபோல் ஒரு நோயாளியின் உறவினர் இன்னொரு நோயாளிக்கும், அவரது உறவினர் இந்த நோயாளிக்கும் சிறுநீரகம் கொடுக்கலாம். இதில் பணம் யாரும் யாருக்கும் பணம் கொடுக்க கூடாது.
அதை போல் கணவன், மனைவிக்குள் சிறுநீரகம் பொருந்தி கொள்ளவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை பெற்றோர்கள், கூட பிறந்தவர்கள், குழந்தைகள் ஆகியோர் மட்டும் சிறுநீரக தானம் செய்யும் குடும்ப உறுப்பினர்களாக கருதப்பட்டனர். தற்போது இந்த வரிசையில் தாத்தா, பாட்டிகளும், பேரக்குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் ஆசாத்.
செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில்,
இந்த சட்டம் விரைவில் கோவா, மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் யூனியன் பிரேதசங்களில் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும். இதை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொண்டு வரப்படும்.
இது காஷ்மீர் மற்றும் ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்படாது. அங்கு ஏற்கனவே வேறு சட்டங்கள் இருக்கின்றன என்றார்.