ஜூன் 24ல் உலக செம்மொழி தமிழ் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் 9வது உலக செம்மொழி தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நடைபெறுகிறது. நான்கு நாட்களுக்கு மாநாடு நடைபெறும்.

முன்னதாக இந்த மாநாடு உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் ஜனவரி மாதம் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாநாட்டை நடத்தும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மாநாடு நடத்த ஓராண்டு காலத்துக்கும் மேல் அவகாசம் கோரியது.

ஆனால், முன்னதாகவே மாநாட்டை நடத்த தமிழக அரசு அனுமதி கோரியது. இதை அந்த நிறுவனத்தின் 13 நிர்வாகிகளில் 11 பேர் ஏற்றுக் கொண்டாலும் அதன் தலைவராக உள்ள ஜப்பானிய தமிழ் அறிஞர் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து தமிழக அரசே அந்த மாநாட்டை நடத்துவது என்றும், இதை உலகத் தமிழ் மாநாடு என்றில்லாமல் உலகத் செம்மொழி தமிழ் மாநாடு என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு ஜூன் மாதம் 24ம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து கலந்தாலோசிக்க, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோருடைய கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு பின் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-தமிழக முதல்வர் காஞ்சியில் நடைபெற்ற போரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருப்பதற்கு இலங்கை மலேசியா, சிங்கப்பூர் மொரீசியஸ் போன்ற வெளிநாட்டு தமிழறிஞர்கள், ஆர்வலர்களும், தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் முதல்வரை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆய்வு கட்டுரை தயாரிப்பதற்கும் பயணத் திட்டங்களை வகுத்து கொள்வதற்கும் கூடுதலாக காலம் அளித்திட வேண்டுமென்ற ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று 2010 ஜுன் மாதம் இறுதி வாரம் அல்லது ஜுலை முதல் வாரத்தில் இந்த மாநாட்டை நடத்திட முதல்வர் கருணாநிதி முன் வந்திருப்பதை இந்தக் கூட்டம் வரவேற்கிறது.

இந்த த்தீர்மானத்தை முனைவர் ஐராவதம் மகாதேவன் முன்மொழிந்திட, முனைவர் க.ப.அறவாணன் வழி மொழிந்தார்.

- மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கோடை விடுமுறை நிறைவடையும் முன்பும் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பும் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜுன் மாத இறுதி வாரத்தில் நடத்தப்பட, படைப்பாளர்கள், கல்வியாளர்கள் அடங்கிய இக்கூட்டம் முதல்வர் கருணாநிதியை வேண்டி கேட்டு கொண்டதற்கிணங்க ஜுன் மாதம் 24ம் நாள் முதல் 27ம் நாள் வரை நான்கு நாட்களுக்கு, கோவையில் உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டினை நடத்தலாம் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

இந்த தீர்மானத்தை முனைவர் பொற்கோ முன்மொழிந்திட, முனைவர் சிலம்பொலி செல்லப்பன் வழி மொழிந்தார்.

இக் கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, ஐம்பெருங்குழு, எண்பேராயம் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன்,

இரா.முத்துக்குமாரசுவாமி, ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் பொன்.கோதண்டராமன், பேராசிரியர் ஆ.ரா.வெங்கடாஜலபதி, பேராசிரியர் அ.அ.மணவாளன், பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன், பேராசிரியர் வீ.அரசு, த.ஜெயகாந்தன், பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியன்,

அவ்வை நடராஜன், கவிஞர் வைரமுத்து, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, கவிஞர் ஈரோடு தமிழன்பன் மற்றும் பேராசிரியர் க.ப.அறவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தனி அதிகாரிகள் நியமனம்:

இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான நிர்வாக ஏற்பாடுகளை செய்ய தனி அலுவலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீனும், கோவையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் தனிப் பொறுப்பு அலுவலகராக டாக்டர் பிரபாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...