For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை டிஏவி பள்ளி முதல்வரிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள பிரபல டிஏவி ஆடவர் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சதீஷிடம், பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதையடுத்து சதீஷுக்கு ஆதரவாக பெற்றோர்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்ய சமாஜத்தின் சார்பில், சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.ஏ.வி. என்ற பெயரில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், கோபாலபுரம் டி.ஏ.வி., ஆண்கள் சீனியர் செகண்டரி பள்ளி (சி.பி.எஸ்.இ.) மிகவும் பிரபலம்.

பொதுத் தேர்வுகளில், இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடங்களைப் பிடிக்கத் தவறுவதில்லை. இந்த பள்ளியின் முதல்வராக சதீஷ் (48) பணி புரிந்து வந்தார்.

1983ம் ஆண்டு இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, பின் 1995ல் முதல்வராக உயர்ந்தார். கடந்த ஆண்டுக்கான சிறந்த நல்லாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளையும் பெற்றவர் இவர்.

இந்நிலையில், திடீரென சதீஷ் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சதீஷ் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற் காகவும் கடுமையாக உழைத்து வந்தேன். கடந்த 23ம் தேதி பகல் 2.30 மணிக்கு, நிர்வாக உறுப்பினர்கள் பர்மிளா கவர், ரவி மல்ஹோத்ரா உள்ளிட்ட மூன்று பேர் எனது அறைக்கு வந்து, உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்தால் தான், செயலர் பள்ளிக்கு வருவார் என்று தெரிவித்தனர்.

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து, ஸ்ரீபெரும்புதூரில் மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். கல்வியாளர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுத்தனர். இதில், எப்படி கலந்துகொள்ளலாம் என்றும் கேள்வி எழுப்பினர். என் மீதான நடவடிக்கைக்கு, "ஈகோ' மட்டும் தான் காரணம். வேறு ஒன்றும் கிடையாது.

ராஜினாமா கடிதத்தை பெறுவதற்கு முன், எனது வக்கீலுடன் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை பெற்றனர். பொதுத்தேர்வு முடியும் வரையாவது, பணியில் தொடர அனுமதியுங்கள் என்று கேட்டேன். மறுத்து விட்டனர்.

திடீரென பாதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட் டிருப்பதை நினைத்து வருந்துகிறேன். பெற்றோர்கள், மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அவர்கள் விருப்பத்தை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றார் சதீஷ்.

சதீஷ் விவகாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், இந்தப் பள்ளி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு சதீஷின் பெயரும் சென்னையில் மிகவும் பிரபலம். இவரது செயல்பாடுகளால் கவரப்பட்டு பலரும் தங்களது பிள்ளைகளை இங்கு சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷின் வீட்டுக்கு ஏராளமான பெற்றோர் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் சதீஷே மீண்டும் முதல்வராக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X