For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அகதிகளுக்கு ரூ. 100 கோடி: கான்க்ரீட் வீடு- டிவி- பஸ் பாஸ்- திருமண உதவி- காப்பீடு

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித் தருவது, இலவச கலர் டிவி வழங்குவது, இலவச பஸ் பாஸ் வழங்குவது என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் நிலவும் அவலம், அலங்கோலம் குறித்து ஒரு வார இதழ் விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு விழித்துக் கொண்டது.

அமைச்சர்களை அகதிகள் முகாம்களுக்குச் சென்று பார்த்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர்களும் போய் முகாம்களைப் பார்த்து அகதிகளிடம் குறைகளை விசாரித்தனர்.

இதையடுத்து நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அமைச்சரவை கூட்டத்தின் தொடக்கத்தில் "அண்மையில் பெய்த பெரு மழை, புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு- குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் நூறுக்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு -அவற்றின் காரணமாக சுமார் 80 பேர் உயிரிழப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்தப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் இந்த அமைச்சரவை கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானமும் அடுத்து நிறைவேற்றப்பட்டது.

வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் நிவாரண நிதி உதவிகள் வழங்குதல் ஆகியவற்றை உடனடியாக தொடர்புடைய அனைத்து அரசு துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன், நிலச்சரிவு மிக அதிக அளவில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேவையான நிலச்சரிவுத் தடுப்புப் பணிகள் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து, முதல்வரின் அறிவுரைக்கிணங்க தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் முகாம்களை கடந்த ஒரு வார காலமாக பார்வையிட்ட தமிழக அமைச்சர்கள் தந்த பரிந்துரைகள் பற்றி அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் துயரங்களை உடனடியாக களைய தமிழக அரசின் சார்பில் ஒட்டு மொத்தமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலும் உள்ள 5 ஆயிரத்து 982 குடியிருப்புகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ளுதல்; முகாம்களில் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல்; புதிய கழிவறைகள் கட்டுதல்; பழைய கழிவறைகளைப் பழுதுபார்த்தல்; புதிய கழிவுநீர்க் கால்வாய்கள் அமைத்தல்; பழைய கழிவுநீர்க் கால்வாய்களைப் பழுதுபார்த்தல்; முகாம்களில் உள்ள சாலைகளை சீரமைத்தல்;

மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல்; வீடுகளில் உள்ள மின்இணைப்புகளைப் பழுதுபார்த்தல்; ஆகிய பணிகளுக்காக ரூ.37 கோடியே 33 லட்சம் -தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களது உடைமைகள் அனைத்தையும் தங்கள் நாட்டில் இழந்து இங்கு அரசு வழங்கும் மாதாந்திர பணக்கொடையினை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதால் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள மக்களுக்கு தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த ரூ.1 கோடி;

தமிழக மக்களுக்கு வழங்கப்படுவது போல் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் இலவச கலர் டி.வி.கள் வழங்கிட 4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயும்; தமிழகத்திலுள்ள ஏழைப் பெண்களின் திருமணங்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கிடும் திருமண நிதியுதவித் திட்டத்தை, முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பயனடையும் வகையில் நீட்டித்திடவும் அதனடிப்படையில் ஏறத்தாழ 1,200 பெண்களின் திருமணங்களுக்கு திருமண நிதியுதவி வழங்க ரூ.2 கோடியே 40 லட்சம் ரூபாயும்;

முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையரகம் வாயிலாக, ஏறத்தாழ 4 லட்சத்து 1,000 ரூபாயும்; தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை நீட்டித்து, கல்லூரிகளில் பயின்று வரும் முகாம்வாழ் 354 மாணவ-மாணவிகளுக்கும் ஏறத்தாழ 8 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும்; - என மொத்தம் ரூ.45 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரம் செலவில், முதற்கட்டமாக, தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, மீதமுள்ள ரூ.54 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரம் தொகையினை அவர்களுக்கு புதியதாக கான்கிரீட் வீடுகள் கட்டப் பயன்படுத்திக் கொள்வதென்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஊனமுற்றோர்களுக்கு, அவர்களின் ஊனத்தின் தன்மை மற்றும் தகுதிக்கேற்ப அரசினால் வழங்கப்பட்டு வரும் நல உதவித் திட்டத்தை நீட்டித்து, உடல் ஊனமுற்ற முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் இலவச செயற்கை உறுப்பு உபகரணங்கள், உதவித் தொகையுடன் கூடிய பள்ளிக் கல்வி, மூன்றுசக்கர கையுந்து ஆகியவற்றை ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வாயிலாக வழங்குதல்;

ஈமச்சடங்குக்காக 12 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு 500 ரூபாயும், சிறியவர்களுக்கு 300 ரூபாயும் 19.9.2008 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவியினை மேலும் உயர்த்தி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பங்களில் ஈமச்சடங்கிற்காக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுவதுபோல, இவர்களுக்கும் வழங்குதல்;

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுமதி பெற்று வெளி மாவட்டங்களுக்குச் செல்லும்போது உடனடியாகத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டால் பணக்கொடை வழங்கும் நாளில் அவர்கள் முகாமிற்கு வருகை தந்து பணக்கொடை பெற்றுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்குதல்;

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 2008-ம் ஆண்டு அரசு வழங்கிய தெளிவுரைகளின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்வு செய்து சம்பந்தப்பட்ட முகாம் பொறுப்பு வட்டாட்சியரின் பரிந்துரை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கேற்ப திருத்திய தெளிவுரைகள் வழங்க ஆவன செய்தல் போன்ற சலுகைகளும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X