For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற கேள்வி நேரம் என்றாலே ஓடி ஒளியும் அழகிரி - ஜெ. தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: கருணாநிதியின் தன்னல நடவடிக்கை காரணமாக தங்களுடைய குறைகளை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்ட இயலாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மதுரை மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். செயலற்ற ஒருவர் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருப்பதை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் இந்த நாட்டை காப்பாற்றுவாராக என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், முதலமைச்சரின் மகனுமான மு.க. அழகிரி மீண்டும் தனது துறை தொடர்பான கேள்வி களுக்கு பதில் அளிக்கும் சமயத்தில் நாடாளுமன்றத்தில் இல்லாதது குறித்து பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

நாடாளுமன்றத்திற்கு வருகை தராததற்கு அழகிரி சொல்லும் காரணம் அவர் வகிக்கும் பொறுப்பான பதவியை அவமதிப்பதாக உள்ளது.

'தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ள வேண்டிய சொந்த நிகழ்ச்சி' தன்னை நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியாமல் செய்து விட்டது என்று அழகிரி தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அந்த 'தனிப்பட்ட நிகழ்ச்சி' என்ன என்பதையும், எந்தவிதத்தில் அந்த சொந்த நிகழ்ச்சி நாடாளுமன்ற பணிகளில் கலந்து கொள்வதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் இந்த நாட்டிற்கு அழகிரி தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்று வதற்காகத் தான் லட்சக்கணக்கான மக்கள் அழகிரிக்கு வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறதே தவிர, தனிப்பட்ட சொந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அல்ல. உண்மையிலேயே மக்களின் வாக்குகளை அழகிரி பெற்று இருப்பாரேயானால், வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அழகிரிக்கு இருக்கிறது.

'என்ன பெரிய கேள்வியை எதிர்க்கட்சியினர் கேட்டிருக்கிறார்களா?' என்றுஅழகிரி கேட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்தே இந்திய நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தையும், எதிர்க்கட்சியினரையும் அழகிரி எந்த அளவுக்கு அவமதிக்கிறார் என்பது தெரிகிறது.

எப்பொழுதெல்லாம் தனது துறை சம்பந்தமான கேள்விகள் கேட்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து நாடாளுமன்றத்திலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதை அழகிரி வாடிக்கையாக வைத்திருப்பதால், இதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக கருத வேண்டுமே தவிர, ஏதோ ஒரு முறை நிகழ்ந்த நிகழ்வாகக் கருதி அப்படியே விட்டுவிட முடியாது.

ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான கேள்விகள் வரும்போதெல்லாம் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனாவை களத்தில் இறக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளும் கூட்டணி தள்ளப்பட்டிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 120வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தின் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப் பட்டு உள்ள இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பேசுகின்ற திறமை அழகிரியினிடத்தில் இல்லாதது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அழகிரியின் தந்தை கருணாநிதியோ தமிழ் மொழிக்கு 'செம்'மொழி தகுதியை தான் பெற்றுத் தந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் தமிழ்மொழிக்கு இரண்டாம் தகுதிநிலை தரப்பட்டிருப்பது குறித்து கருணாநிதி அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

அதேபோன்று, நாடாளுமன்றத்தில் தன்னுடைய மகனுக்கு மொழி முட்டுக்கட்டையாக இருப்பது குறித்தும் கருணாநிதி அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதிலிருந்து கருணாநிதியின் ஒரே நோக்கம், தனக்குத் தொல்லை தராதவாறு மாநில அரசியலிலிருந்து அழகிரியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

கருணாநிதியின் தன்னல நடவடிக்கை காரணமாக தங்களுடைய குறைகளை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்ட இயலாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மதுரை மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

செயலற்ற ஒருவர் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருப்பதை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் ஒரு குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக. எல்லாம் வல்ல இறைவன் இந்த நாட்டை காப்பாற்றுவாராக என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X