For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: தமிழர்கள் போருக்கு முன் வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்தப்படுவர்-எஸ்.எம்.கிருஷ்ணா

By Staff
Google Oneindia Tamil News

SM Krishna
டெல்லி: போரினால் இடம்பெயர்ந்து வன்னியில் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் 3 லட்சம் பேரும், போருக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த அதே இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என்றும், அதை இந்தியா உறுதி செய்யும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பாக இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார் கிருஷ்ணா.

அப்போது அவர் கூறுகையில்,

இலங்கையில் போரினால் உள்நாட்டில் இடம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்படுவதை உறுதிசெய்ய இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

முகாம்களில் வாழ்ந்த இந்த 3 லட்சம் தமிழர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கவும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அப்போது அதிமுக பாஜக சி.பி.ஐ உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

ஒரு மிகப்பெரிய இனப் படுகொலையே நிகழ்த்தப்பட்டதற்கு காரணமாக இருந்து இந்திய அரசு தானே என உறுப்பினர்கள் ஆக்ரோஷமாக பேசினர். 3 லட்சம் தமிழர்களை முள் வேலிக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தபோது இந்தியா என்ன செய்தது என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

பாஜக தலைவர் வெங்கைய நாயுடு கூறுகையில், 'இலங்கையில் உள்ள தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு எங்களுக்கு மிகுந்த கவலை அளித்தது. அண்டை நாட்டின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் விடுதலைப் புலிகள் மீது எங்களுக்கு அனுதாபமும் இல்லை.

ஆனால், ஒரு விஷயம் உறுதியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் போய்விட்டார்கள், பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டது என்று யாராவது நினைத்தால், அது தவறானது என்றே சொல்லவேண்டும். போரை வென்றுவிடலாம். ஆனால் தமிழர்கள் அமைதியை தொலைத்திருக்கிறார்கள்.

தமிழ் ஈழ விவகாரத்துக்கு அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கும் வரை அங்கு பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும் என்றார்.

இந்தோனேசிய கடற்படை முற்றுகை-தமிழர்கள் பீதி:

இந் நிலையில் இந்தோனேசிய கடற்பகுதியில், புகலிடம் கோரி 254 இலங்கைத் தமிழர்கள் அடைபட்டுள்ள கப்பலை, இந்தோனேசிய கடற்படைப் படகுகள் திடீரென முற்றுகையிட்டதால் கப்பலில் உள்ள தமிழர்கள் பீதியடைந்தனர்.

ஆனால் இது வழக்கமான கடற்படையினருக்கான பயிற்சி என இந்தோனேசியா கூறுகிறது. இருப்பினும் கப்பலில் உள்ள தமிழர்கள் தங்களுக்கு எதிராக இந்தோனேசியா செயல்படுகிறதோ என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்று இந்தோனேசியாவில் தற்போது கப்பலுடன் அடைபட்டுள்ளனர் 254 இலங்கைத் தமிழர்கள். பல மாதங்களாக இவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், திடீரென அந்தக் கப்பலைச் சுற்றி 25 சிறிய படகுகள் முற்றுகையிட்டன. இதனால் கப்பலில் இருந்த தமிழர்கள் பீதியடைந்தனர்.

அந்தப் படகுகளில் இருந்தவர்கள் ராணுவ வீரர்களின் உடையில் இருப்பதாகவும், தங்களது கப்பலுக்குள் ஒரு பையை போட முயன்றதாகவும், அதை தாங்கள் வெளியில் தள்ளி கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அந்தப் படகுகள் திரும்பிச் சென்று விட்டதாகவும் தமிழர்கள் கூறினர்.

மேலும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தோனேசிய கடற்படை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சகோம் தம்போயன் கூறுகையில், இது வழக்கமான கடற்படையினரின் பயிற்சிதான். தமிழர்களை வலுக்கட்டாயமாக அகற்ற நடந்த முயற்சி அல்ல என்றார்.

இந்த பயிற்சியில், இந்தோனேசியா ராணுவத்தின் அதி தீவிரப் பிரிவாக கருதப்படும் கொப்பஸாஸ் சிறப்புப் படைப் பிரிவினர் இதில் ஈடுபட்டனராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X