அரபு நாடுகளில் வேலை இழந்து திரும்பும் இந்தியர்களுக்கு உதவ சிறப்பு நிதியம்

ஐக்கிய அரபு நாடுகளில் முக்கியமான துபாய் கடன்
நெருக்கடி வலையில் சிக்கியுள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
குறிப்பாக ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில்துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் துறைகளில் பணியில் உள்ள ஏராளமான இந்தியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த நெருக்கடியால் வேலையை இழந்து தாயகம் திரும்பும் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு உதவ மத்திய அரசு விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களின் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வளைகுடா நாடுகளில் வேலை இழந்து, வாழ்வாதாரத்துக்கு வழி தெரியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். இதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது என்றார்.
துபாயில் வசித்து வரும் இந்தியர்கள் மூலம், அன்னியச் செலாவணியாக கடந்த 2007ம் ஆண்டில் 2,700 கோடி அமெரிக்க டாலர்களை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது. துபாயிலிருந்து அதிக அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications