For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை என்று சொல்லப்பட்டாலும் அந்த ஒப்பந்தத்திலே இரு சாராரும் ஏற்றுக் கொண்ட பல பகுதிகள் இருக்கின்றன. அந்த ஷரத்துக்களையே இலங்கை மீறி வருவது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டி:

கேள்வி: கச்சத் தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளாரே?

முதல்வர் கருணாநிதி: ஒப்பந்தம் முடிந்து போன கதை என்று சொல்லப்பட்டாலும் அந்த ஒப்பந்தத்திலே இரு சாராரும் ஏற்றுக் கொண்ட பல பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக அங்கே யாத்திரை செல்கின்ற மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது. கச்சத் தீவு பகுதிகளில் மீன் பிடிக்கின்ற உரிமை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உண்டு.

கச்சத் தீவு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டபோது இந்த ஷரத்துகள் எல்லாம் இடம் பெற்றிருந்தன. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அந்த ஷரத்துகள் எல்லாம் இலங்கை அரசினால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டன என்று தகவல்கள் வெளியாயின.

அதை மெய்ப்பிக்கின்ற வகையில் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது என்பது கூடப் பிரச்சனை அல்ல. அதற்கு முன் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், அதைப் போல இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கும் எந்த இடையூறும் வராமல் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

ஒப்பந்தம் செய்து கொண்டபோது போடப்பட்ட ஷரத்துக்களே மீறப்படுகின்றன என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

கேள்வி: மாநாடு முடிந்த பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாக நீங்கள் அறிவித்திருக்கிறீர்கள். அப்போது முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கப் போகிறீர்கள்?

கருணாநிதி: மாநாடு நடைபெறுவதற்கு இடையில் நீண்ட காலம் இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு ஜூன் திங்கள் வரையில் பொறுத்திருங்கள்.

கேள்வி: ஓய்வு பெறப் போவதாக அறிவித்ததையொட்டி ஒரு தரப்பினர் தாங்கள் ஓய்வு பெறக் கூடாது என்றும், வேறு ஒரு சிலர் துணை முதல்வரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்களே?

கருணாநிதி: அந்த இரு வேறு கருத்துக்களையும் பரிசீலிப்போம்.

கேள்வி: இடைத் தேர்தல்கள் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் அராஜகம் நடைபெறுவதாக அதிமுக புகார் கூறியுள்ளதே?

கருணாநிதி: எதிர்க்கட்சியின் தேர்தல் பல்லவியே அது தான்.

கேள்வி: வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தல்கள் திமுகவுக்கு சாதகமாக இருக்குமா?, பாதகமாக இருக்குமா?.

கருணாநிதி: நாங்கள் பாதகங்களையும் சாதகமாக மாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.

கேள்வி: இடைத் தேர்தல் வெற்றி குறித்து எந்த அளவிற்கு நம்பிக்கையாக இருக்கிறீர்கள்?

கருணாநிதி: கேள்வி கேட்கிற உங்களது உறுதியை வைத்து, அந்த அளவிற்கு நம்பிக்கையாக இருக்கிறோம்.

கேள்வி: மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்பீர்களா?.

கருணாநிதி: ஏற்கனவே கேட்டிருக்கிறோமே.

கேள்வி: பாமகவிடம் ஆதரவு கேட்பீர்களா?

கருணாநிதி: இந்தக் கேள்விக்கு என்னிடமிருந்து வருகின்ற பதில் மூலம் இடைத் தேர்தலிலே திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறீர்கள், உங்கள் முயற்சி பலிக்காது.

கேள்வி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் எந்த அளவிலே உள்ளன?

கருணாநிதி: கோவை மாவட்ட ஆட்சித் தலைவருடன் கலந்து பேசி அங்கே நாம் நடத்தவிருக்கின்ற மாநாட்டிற்கான இடவசதிகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறோம். அங்கே மிகப் பிரமாண்டமான அரங்குகள் இருக்கின்றன. அங்கேயே மாநாட்டினை நடத்துவதற்கான வசதி வாய்ப்புகள் இருக்கின்றன.

மாநாட்டின் நிறைவு நாளான ஜூன் 27ம் தேதியன்று கோவை மாநகரில் ஊர்வலம் நடைபெறவுள்ளது. பழந்தமிழ் புலவர்கள், மன்னர்கள், இலக்கியங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்ற வகையில் அந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்படும். ஊர்வலம் செல்வதற்கேற்றவாறு வசதியான வீதிகள் அங்கே இருக்கின்றனவா என்பதையும், ஊர்வலத்தைக் கண்டுகளிக்க மக்களுக்கு எளிதான வழிவகைகள் இருக்கின்றனவா என்பதையும் ஆராய்ந்து பார்த்து அதிலும் மன நிறைவு கொண்டுள்ளோம். மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி: மாநாட்டுக்கான செலவுகள் எவ்வளவு?

கருணாநிதி: மாநாட்டுப் பணிகளை நேரடியாகக் கவனிக்க அரசின் சார்பில் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், தனி அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருடைய மேற்பார்வையில் மாநாட்டுச் செலவுப் பணிகள் பார்த்துக் கொள்ளப்படும். அவர்கள் எந்த அளவிற்குத் தேவை என்று சொல்கிறார்களோ அந்த அளவிற்கு அந்தத் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முன் வரும்.

கேள்வி: சமச்சீர் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக் கல்வியைக் கொண்டு வர வேண்டும் சில கல்வியாளர்கள் சொல்கிறார்களே?

கருணாநிதி: தாய் மொழியைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல. நாங்கள் இந்த மொழிப் பிரச்சனையில் அண்ணா வகுத்த இரு மொழிக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். தாய்மொழியில் மட்டும் எந்த அளவிற்கு பயன் பெற முடியும் என்பதையும், அதே நேரத்தில் ஆங்கிலத்தின் உதவியால் எந்த அளவிற்கு பயன்பெற முடியும் என்பதையும் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்

கேள்வி: மத்திய அரசின் மீன்பிடி சட்டத்தை எதிர்த்து, கன்னியாகுமரியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே?

கருணாநிதி: அந்தச் சட்டம் நாமும் ஏற்றுக் கொள்ளாத சட்டம் தான். அதை கடிதம் மூலமாக ஏற்கனவே மத்திய அரசுக்கும் அந்தத் துறை அமைச்சருக்கும் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் அதைப் பற்றி சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன். சிந்தித்து ஏற்ற முறையில் தீர்வு காண்பார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X