For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விட்டதைப் பிடிக்க துடிக்கும் பாமக-பாடம் கற்குமா அதிமுக?

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss with Jayalalitha
சென்னை: ஒரே ஒரு தோல்விதான். ஆனாலும் இமயமலையே கவிழ்ந்து போனதைப் போன்ற ஒரு பெரும் கவலையுடன், இழந்த செல்வாக்கை மீண்டும் பறிக்கும் நோக்கில், மின்னல் வேகத்தில் செயல்பட்டு படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பாமகவின் வைராக்கியம் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பென்னாகரம் இடைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு இன்னொரு இடைத் தேர்தல். எதிர்க்கட்சியான அதிமுகவோ, தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியே தென்படாமல் சோம்பிப் போய்க் கிடக்கிறது. ஆனால் அனைவரது கவனத்தையும் தற்போது வெகுவாக ஈர்த்திருப்பது பாமகதான்.
கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் ரேஞ்சுக்கு படு வேகமாக செயல்பட்டு வருவது பாமக மட்டுமே.

பாமகவின் இந்த சுறுசுறுப்பான, மின்னல் வேக பணிகள் வியக்க வைத்துள்ளது. இழந்த பெருமையை தட்டி எழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. இதையடுத்து எப்படி வந்தது இந்தத் தோல்வி, எங்கே போனார்கள் நமக்காக வாக்களித்து வந்த வன்னியர்கள் என்ற கேள்விகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்கள், ஊர் ஊராகப் போய் மக்களின் கருத்தை அறிவது என தீவிரமாக இறங்கினார் ராமதாஸ்.

இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தல் வந்துவிட தனது இழந்த செல்வாக்கை நிலைநாட்ட படு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ்.

பென்னாகரம் தொகுதியின் முக்கிய வாக்கு வங்கியே வன்னியர்கள்தான். எனவே இங்கு வெற்றி பெற்றால் தான் அடுத்த தேர்தலில் திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணியில் சேர்ப்பார்கள் இல்லாவிட்டால், அதோ கதி தான் என்பதை ராமதாஸ் தெளிவாகவே உணர்ந்துள்ளார்.

பாமகவின் எதிர்காலமே இந்த இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்தது தான் என்பதால் அக் கட்சியினரும் படு வேகமாக உள்ளனர்.
வெற்றி அல்லது குறைந்தபட்சம் 2வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற இலக்குடன் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் ராமதாஸ் தலைமையில் பாமகவினர்.

பாமக முதன் முதலாக 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சுப்ரமணியம், 32 சதவீத வாக்குகளையும் அள்ளி 2வது இடத்தைப் பிடித்தார்.

1996ல் நடந்த தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிட்டது. அப்போது பென்னாகரத்தில் போட்டியிட்ட ஜி.கே.மணி அபார வெற்றி பெற்றார். 2001ல் நடந்த தேர்தலி்ல கூட்டணி வைத்து போட்டியிட்டது பாமக. அப்போதும் மணிதான் வென்றார்.

2006ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமகவுக்கு பென்னாகரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மணி மேட்டூருக்கு மாறினார். இத்தொகுதியில் பெரியண்ணன் போட்டியிட்டு வென்றார். இவர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியின் சுமார் 2 லட்சம் வாக்காளர்களில், ​ஒவ்வொரு வாக்காளரின் ஆதரவையும் தங்கள் கட்சிக்குத் திருப்ப வேண்டும் என்ற திட்டத்தோடு,​​ தேர்தல் வியூகம் அமைத்து,​​ பாமக​ செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 100 வாக்காளருக்கும் ஒரு களப் பணியாளர் வீதம்,​​ 2,000 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக தொகுதியை சுற்றி வருகின்றனர்.

அப்பணியாளர்களை ஒருங்கிணைக்க 30 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு மையத்துக்கும் அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் இப்போதைய எம்.எல்.ஏக்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர,​​ தொகுதி முழுவதையும் சுற்றி வரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்,​​ மொத்தமுள்ள 48 பஞ்சாயத்துகளில்,​​ குறிப்பிட்ட பஞ்சாயத்துகளை தங்கள் சொந்த பொறுப்பில் எடுத்துக் கொண்டு தேர்தல் பணி செய்கின்றனர்.​ குறிப்பாக,​​ டாக்டர் ராமதாஸே, தனக்கென 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டுள்ளாராம்.

அதேபோல, அன்புமணி ராமதாஸ்,​​ ஜி.கே.​ மணி,​​ காடுவெட்டி குரு,​​ வேல்முருகன் உள்ளிட்டோரும் தலா 5 பஞ்சாயத்துகளை எடுத்துக் கொண்டு தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிக்குழுத் தலைவராக செயல்படும் எம்.எல்.ஏ வேல்முருகன் கூறுகையில், எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த 3 மாதங்களாக தொகுதியின் அனைத்து கிராமங்கள்,​​ அனைத்து வீதிகளுக்கும் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.​

மேலும் எங்கள் களப்பணியாளர்கள் மூலம்,​​ ஒவ்வொரு வாக்காளரையும் இதுவரை 30 தடவைக்கு மேல் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளோம்.​ வன்னிய மக்களுக்கு ராமதாஸ் செய்த சாதனைகள் மற்றும் கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வியால் சந்தித்த வேதனைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி வருகிறோம்.​ எனவே,​​ திமுகவின் பணபலத்தையும் மீறி,​​ நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்.

பாமகவின் இந்த துடிப்பான பணிகளைப் பார்க்கும்போது மறுபக்கம் அதிமுகவின் சவக் களையான முகம் தான் நினைவுக்கு வருகிறது.

பாமகவுக்கு கிடைத்தது ஒரு தோல்வி. ஆனால் அதிமுகவோ கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும், அனைத்து இடைத் தேர்தல்களிலும் தோல்வியைத் தான் சந்தித்து வருகிறது. ஆனாலும் அந்தக் கட்சி அதைத் துடைக்கும் வகையிலோ, தோல்விக்கு என்ன காரணம் என்பதை அறிவதிலோ ஒரு கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.

கட்சியினரை உற்சாகப்படுத்தி, தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் எந்த முயற்சியிலும் ஜெயலலிதா ஈடுபடவில்லை. அதை விட கொடுமையாக, பென்னாகரத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாமகவினரின் துடிப்பையும், தவிப்பையும் பார்த்தாவது அதிமுக பாடம் கற்குமா என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X