For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமகவால் பென்னாகரம் தொகுதிக்கு ஒரு பயனும் இல்லை-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரால் தொகுதிக்கு ஒரு பயனும் இல்லை. அதே போல அவரது மகனை தேர்ந்தெடுத்தால் அவரும் எதுவும் செய்ய மாட்டார் என்று கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

பென்னாகரம் தொகுதியில் 2வது நாளாக ஏசி வேனில் உள்ளே அமர்ந்தபடி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். பழையூர் கிராமத்தில் அவர் பேசுகையில்,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இரண்டு முறை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் தொகுதி மக்களாகிய உங்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. இவருடைய மகனும் தந்தை வழியில் தான் நடப்பார். உங்களுக்காக எதுவும் செய்ய மாட்டார். எனவே இவருக்கு ஓட்டளித்து எந்தப் பயனும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்பட்டது. மேலும், இந்த தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி பகுதி ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் பணிக்காக எனது ஆட்சி காலத்தில் ஆறரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய உங்களது நல் ஆதரவோடு அடுத்த ஆண்டு அ.தி.மு.க. அரசு அமையப் பெற்றதும், உங்களின் முக்கிய கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

இந்த தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு தொழிற்சாலைகள் அமைக்கவும்; ஏரிiரை மையமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அமைக்கவும்; ஒகேனக்கல்லில் அரசு சார்பில் கூட்டுறவு மீன் விற்பனைக் கூடம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இயக்கமாகவும்; எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற இயக்கமாகவும் அதிமுக என்றென்றும் விளங்கும். பாட்டாளி வர்க்கத்தினருக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக

பென்னாகரம் பொன் விளையும் நகரமாக மாற ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமைய எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் அன்பழகனை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று, உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பென்னாகரம் தொகுதியில் மைனாரிட்டி திமுக, அரசு எவ்வித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றவில்லை. இடைத்தேர்தல் வந்து விட்டதால், விளம்பரத்துக்காக சாலை போடுதல், கட்டடம் கட்டுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. 27ம் தேதிக்கு பின் இவை அனைத்தும் காகித அறிவிப்புகளாக மாறிவிடும்.

மத்தியிலும் பங்கு, மாநிலத்திலும் பங்கு என்ற உச்சகட்ட நிலையில் மைனாரிட்டி திமுக அரசு உள்ளது. உங்கள் பணத்தை கொடுக்கின்றனர், பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் அது உங்கள் பணம்.

பென்னாகரம் தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். வன்முறை ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு இந்த தேர்தல் வாய்ப்பு. திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள், அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.

தனது பிரச்சாரத்தின்போது பெரும்பாலும் பேப்பர்களில் எழுதி வைத்துக் கொண்டு அதையே தான் படித்தார் ஜெயலலிதா.

ஜெ கார் ரிப்பேர்:

சேலம் எல்.ஆர்.என். ஹோட்டலில் தங்கியிருந்தபடி தான் ஜெயலலிதா பென்னாகரத்தில் பிரச்சாரம் செய்தார்.

நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு சேலத்தில் இருந்து பென்னாகரம் தொகுதிக்கு அவர் பிரசாரத்துக்குக் கிளம்பத் தயாரானபோது மிட்சுபிஷி கார் பழுதாகி விட்டது.

அதை சரி செய்ய முடியாததால் மாலை, ஏசி டெம்போ டிராவலர் வேன் கொண்டு வரப்பட்டு அதில் கிளம்பிச் சென்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X