For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் இழுபறிக்குப் பின்னர் நேற்று முதல் ஓடத் தொடங்கியது மயிலாடுதுறை ரயில்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: பெரும் இழுபறிக்குப் பின்னர் நேற்று மாலை முதல் விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் மீண்டும் பயணிகள் ரயில் ஓடத் தொடங்கியது.

விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ.270 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் ரயில்கள் நிறுத்தப் பட்டன.

ஓராண்டுக்குள் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகவும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

பின்னர் ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் சிக்னல், பிளாட்பாரம், ரயில் நிலைய கட்டிடங்கள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாத தால் பயணிகள் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

ஆனால் பயணிகள் ரயில் போக்குவரத்து குறித்து சத்தமே காட்டாமல் இருந்து வந்த்து ரயில்வே. இதையடுத்து மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது ரயில்வே துறை சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏப்ரல் 22ம் தேதிக்குள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் நேற்று காலை வரை ரயில் ஓடுவதற்கான அறிகுறியே இல்லை. ரயில் ஓடும் என்ற நம்பிக்கையுடன் ரயில் நிலையத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் வருவதற்கான அறிகுறியே இல்லாததால் பெரும் அதிருப்தியுடன் வெளியேறினர்.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் ராஜேந்திரன். இந்த நிலையில் அவசரம் அவசரமாக மாலையில் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதற்காக விழுப்புரம் ரயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் 6 பொது பெட்டிகள், பெண்கள் அமரும் 1 பெட்டி, ஒரு கார்டு பெட்டி என 8 பெட்டிகளுடன் 817 என்ற எண்ணுடைய பயணிகள் ரயில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த ரயிலுக்கு வாழை தோரணங்கள், மாவிலை தோரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரித்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலை ரெயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவன உதவி பொது மேலாளர் பி.கே.ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், கோர்ட்டுக்குப் பயந்தே ரயிலை அவசரம் அவசரமாக இயக்கியுள்ளது ரயில்வே என்று மக்கள் பொருமித் தீர்த்தனர்.

அரசு ஊழியர்கள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 4 ஆண்டுகளாக ரயில் வசதியின்றி பெரும் அவதிப்பட்டு வந்தனர். தற்போது மீண்டும் ரயில் ஓடத் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X