For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்து அதிமுக ஆட்சி தான்!: அதுவும் புனித ஜார்ஜ் கோட்டையில்!!- ஜெ நம்பிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha Feet
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் என்றும், அது புதிய தலைமைச் செயலக வளாகத்தில் அமையாது என்றும், புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில், ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வரும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய ஜெயலலிதா, முத்துசாமி தனது மனக்குறைகளை என்னிடம் கூறலாம் என்று நானே அவருடன் போனில் பேசினேன். அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தேன். அவர் உடல்நிலை சரியில்லை என்று கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், கடிதம் எனக்கு வரவில்லை. அவர் இந்த செயற்குழு கூட்டத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்தேன், வரவில்லை. முத்துசாமி விஷயத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்.

அப்போது மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர், கட்சியிலிருந்து வெளியேறும் சில தனி நபர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மிகவும் பிடிப்போடு உள்ளதாகவும் பேசினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, ஏற்கெனவே கட்சியிலிருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் சேர்ந்த பலர், இப்போது மீண்டும் அதிமுகவில் இணைய எனக்குத் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக என்பது தலைவர்களை நம்பிய கட்சி அல்ல. சில தலைவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்லலாம். ஆனால், ஒரு தொண்டர் கூட அவர்கள் பின்னால் செல்ல மாட்டார்கள்.

எனவே, கட்சியினர் இது போன்ற பிரச்னைகளையெல்லாம் மறந்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் வெட்டு, தாங்க முடியாத விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

எனக்கும் 62 வயதாகிவிட்டது. ஒரு பக்குவமான தாயாகத் தான் நான் இருந்து வருகிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒருவர் கூட கட்சியில் இருந்து வெளியேறுவதை நான் விரும்பவில்லை.

45 மாவட்ட செயலாளர்களும், மாநில நிர்வாகிகளும் இருக்கிறார்கள். கட்சியில் இருக்கும் எல்லோருக்கும் பதவி தர முடியாது. பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்களை புறக்கணிக்கக் கூடாது. கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொண்டர்கள் நன்றாகத் தான் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். என்னை எதிர்த்தவர்களை கூட அமைச்சர், எம்எல்ஏ பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறேன்.

அதிமுக பல வெற்றி, தோல்விகளை சந்தித்திருக்கிறது. 1996ல் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் இப்போது பேசுவதைப் போலத் தான் பேசினார்கள். அதிமுக இனி ஆட்சிக்கே வரமுடியாது என்றார்கள். அப்போது நடந்த ஒரு செயற்குழு கூட்டத்தில் நான் சொன்னேன், மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம். இப்போது நடந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் கூட இனி அதிமுக ஆட்சிக்கு வராது என்று தான் கூறினார்.

ஆனால், நான் அதை ஒரு வைராக்கியமாக எடுத்துக் கொண்டு, நான் சொன்னதை முடித்துக் காட்டினேன்.

அவர்களிடம் (திமுகவிடம்) பணம் இருக்கலாம், கூட்டணி இருக்கலாம். ஆனால், உறுதியாகச் சொல்கிறேன், அடுத்து நாம் தான் ஆட்சிக்கு வருவோம். 96க்கு பின்னர் என் மீது 13 பொய் வழக்குகள் போடப்பட்டன. 2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவில்லையா?.

2011ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி. அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமர்த்தியே தீருவேன். புதிதாக கட்டப்பட்டு இருக்கும் சட்டசபை கட்டிடம் புதுச்சேரி போலீஸ்காரரின் தொப்பி போல உள்ளது. அந்த புதிய சட்டசபை கட்டிடத்திற்குள் நுழைய மாட்டேன்.

அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம். ஆனால் புதிய தலைமைச் செயலக வளாகத்தில் அல்ல, புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அதிமுக ஆட்சி அமையும் என்று ஜெயலலிதா பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X