For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் 45வது பிறந்த நாளில் வாழ்த்திய பெரியார், அண்ணா, எம்ஜிஆர்

Google Oneindia Tamil News

Annadurai and Periyar
சென்னை: முதல்வர் கருணாநிதி தனது 45வது பிறந்த நாளை கொண்டாடியபோது அவருக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், 48வது பிறந்த நாளின்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதியின் 45-வது பிறந்தநாள் 1968-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது பெரியார், அண்ணா ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வாழ்த்துச் செய்தி:

பெரியார் விடுத்த வாழ்த்துச் செய்தி - பொது மக்களுக்காக பொதுத்தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் பொது மக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களை பாராட்ட, பெருமைப்படுத்த பொதுமக்கள் முயற்சிப்பது இயற்கையே ஆகும். கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத் தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன.

கலைஞர் தனது பள்ளி மாணவ பருவத்தில் இருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை 25-30 ஆண்டுகளாக பொதுத்தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து அந்தக் கட்சியை நல்ல வண்ணம் உருவாக்கிய அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கி, இன்று மகா வன்மை படைத்த காங்கிரசை எதிர்த்துத் தோல்வியடையச் செய்த முக்கியஸ்தர்களில் ஒருவராயும் இருக்கிறார். கலைஞர் அறிவில் சிறந்தவர். நிர்வாகத்தில் சிறந்தவர். பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர்.

அண்ணா விடுத்த வாழ்த்துச் செய்தி - தமிழகத்தின் சிறப்பெழிலை உயிர்ப்பித்து இயற்கை அழகை நம்முன் நடமிடக் காட்டி பல வண்ணக் காட்சிகளை நம் பார்வைக்குக் கொணர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளின் அணி வகுப்பைத் தொகுத்துரைத்துப் பழம்பெரும் வாழ்வின் நாடித்துடிப்பை நல்லோர் புகழ நாற்புறமும் சூழ்ந்த அந்நாள் நல்லறிவை தனது வளமிகு செழுந்தமிழ்ச் சொல் திறத்தால் படைக்கும் தனியாற்றல் படைத்தவர் தம்பி கருணாநிதி. அவரின் வாதத் திறன் சுவைக்க இனிமையானது மட்டுமல்ல- எடுத்துரைக்கக் கேட்கும் போது மயிர்க்கூச்செறிகிறது.

உணர்ச்சிக்கு உரு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல. கருணாநிதி யாரையும் விஞ்சுகிற அளவில் ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர். தமிழ் இலக்கியத்துக்கு நற்பணி ஆற்றியுள்ள கலைஞர்.

கீர்த்திமிக்க அவர் புகழ் திசையெட்டும் பரவுக-வாழ்க என்று தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். விடுத்த வாழ்த்துச் செய்தி

1971-ம் ஆண்டு கருணாநிதியின் 48-வது பிறந்த நாளில் கலைஞர் ஒரு ரோஜா மலர்' என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார்.

அது:

தனியொரு ரோஜா மாலையாவதில்லை. ஒரே ஒரு இதழ் மலராவதில்லை. கழகத்திற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து, லட்சோப லட்சம் தொண்டர்களின் தலைவராக இருக்கிறார் கலைஞர்.

மலர்களைப் பெண்களோடு ஒப்பிடுகிறோம். ரோஜாவை மலர்களின் ராணி என்று சொல்வார்கள். மாலைக்கு ரோஜா காரணமானது போல, கழகத்தின் வளர்ச்சிக்குக் காரணமான கலைஞரையும் ரோஜா என்று குறிப்பிடலாம்.

எல்லோருக்கும் பிறந்தநாள் வருகிறது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது பிறந்த நாட்கள்தான் சமுதாயத்தின் கவனத்தை கவரும் சிறப்பைப் பெறுகின்றன. அத்தகைய பெருஞ்சிறப்பைக் கலைஞரின் பிறந்த நாள் பெற்று வருகிறது. இவர் இந்நாளில் தான் பிறந்தார் என்பதை எண்ணும்போதே இதயத்தில் மகிழ்ச்சி பொங்கும் விதமாக சிலருடைய பிறப்புக்கள்தான் அமைகின்றன. தமிழ் சமுதாயம் பெருமைப்படும் சிறப்பு மிக்க பிறப்பு, நமது கலைஞரின் பிறப்பு.

நாள்தோறும் இந்த நாட்டு மக்களுக்காக, பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்த பாதையில் மகத்தான சாதனைகளைச் செயல்படுத்தி வரும் வேகத்தால் கலைஞரின் பிறந்தநாள் ஆண்டுக்கு ஒருமுறையல்ல; பலமுறைகள் வருவதுபோல் மனதில் பசுமையாக இருந்து வருகின்றன.

இதுபோன்ற பிறந்த நாட்கள் நூற்றுக்கணக்கில் தொடரட்டும். கலைஞரின் சிறப்புக்கள் பெருகட்டும். புகழும், பெருமையும் வளரட்டும்.

வாழ்க கலைஞர். வெல்க பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள் என்று வாழ்த்தியிருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X