For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமெயில், எஸ்எம்எஸ் மிரட்டலையும் தாண்டி இன்னும் கலக்கும் கடிதப் போக்குவரத்து

By Chakra
Google Oneindia Tamil News

Early Indian Postman
சென்னை: எஸ்.எம்.எஸ்., இமெயில், ட்விட்டர் என ஏகப்பட்ட மிரட்டல்கள் இருந்து வருகிற போதிலும், இன்னும் மவுசு குறையாமல் உள்ளதாம் கடிதப் போக்குவரத்து. தினசரி தபாலில் அனுப்பப்படும் கடிதங்களின் எண்ணிக்கை நல்ல உயர்வையும் கண்டு வருகிறதாம்.

அது ஒரு காலம். வெளியூருக்குப் போனால் நமது குடும்பத்தினருக்கு ஒரு இன்லேன்ட் லெட்டரையோ அல்லது தபால் அட்டையையோ வாங்கி அன்புள்ள அப்பாவுக்கு, நான் நலம், அது போல நீங்களும், அம்மா, அக்கா, அண்ணன், தங்கை, அப்பத்தா உள்ளிட்டோர் நலமா என்று ஆரம்பித்து மனதில் தோன்றியதையெல்லாம் எழுதி உதட்டு எச்சிலால் கடிதத்தின் பசைப் பகுதியை தடவி, அதை மூடி, நெஞ்சோடு சில விநாடிகள் வைத்திருந்து பின்னர் தபால் பெட்டியில் போட்டு விட்டு நிம்மதியாக திரும்பிய காலம் அது.

இப்போது அந்தப் பழக்கம் நிறையப் பேரிடம் இல்லாமல் போய் விட்டது. எந்த ஊராக இருந்தாலும் சரி, அல்லது எந்த நாடாக இருந்தாலும் சரி, அம்மாவுடனோ, அப்பாவுடனோ பேச விரும்பினால் செல்லை எடுத்து நம்பரைப் போட்டு டக் டக்டென நாலு வார்த்தைகளில் பேசி விட்டு வைத்து விடலாம்.

ஏதாவது செய்தி தெரிவிக்க வேண்டுமா, கம்ப்யூட்டரில் ஒரு கண்ணும், கைவிரல்களில் டைப்பிங்குமாக மெசேஜ் அனுப்பி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய் விடலாம். இன்று உணர்வுகள் குறைந்து விட்டது, மெஷின் மயமாகி விட்டது.

என்னதான் எஸ்.எம்.எஸ்.அனுப்பினாலும், இமெயில் அனுப்பினாலும், ஒரு இன்லேன்ட் லெட்டர் ஏற்படுத்தும் உணர்வுத் தாக்கத்தை மிஞ்ச இதுவரை எதுவுமே இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம்.

இப்படி பழங்கதையாகிப் போனாலும் கூட கடிதம் அனுப்புவது இன்றளவும் சுறுசுறுப்பாகவே இருப்பதாக தபால்துறை கூறுகிறது. தினசரி தமிழகத்தில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறதாம். இதை இந்த ஆண்டு 20 சதவீத அளவுக்கு அதிகரிக்க தபால் துறை திட்டமிட்டுள்ளதாம்.

இதுகுறித்து தமிழ்நாடு தபால்துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சாந்தி நாயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு எங்களுடைய மொத்த கடிதப் போக்குவரத்து 26.5 லட்சமாக இருந்தது. சென்னையில் மட்டும் 10 லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டன.

இந்த ஆண்டு கடிதப் போக்குவரத்தை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.

எங்களுடைய தபால் போக்குவரத்தில் தபால் கார்டுகள், இன்லேன்ட் கடிதங்கள், கவர்கள், வாழ்த்து உள்ளிட்டவை அடங்கும்.

இளம் தலைமுறையினரிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்த இந்த ஆண்டு கடிதம் எழுதும் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. அதை இளம் தலைமுறையினர் மறந்து விடக் கூடாது.

உலக தபால் தினம் வருகிற அக்டோபர் மாதம் வருகிறது. அதைக் கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும் கடிதம் எழுதும் போட்டியை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X