For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தமிழ் கற்காததற்காக வருந்திய மகாத்மா காந்தி'-ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கோவை: எனது வாழ்க்கையில் நான் வருந்தும் ஒரு விஷயம் என்னவென்றால் தமிழைக் கற்க முடியாமல் போனதே என்பது தான் என்று மகாத்மா காந்தி வருந்திக் கூறி, தமிழைப் பெருமைப்படுத்தினார். அத்தகைய இனிமையும் தனித்தன்மையும், வாய்ந்தது தமிழ்மொழி என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வரவேற்புரையாற்றிப் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது..

மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், கூட்டியிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, இப்போது தொடங்குகிறது!

மாநாட்டினைத் தொடங்கிவைத்து உரையாற்றுவதற்கு; தமிழ் மக்களின் அன்பான அழைப்பினை ஏற்று, இங்கே வருகை தந்திருக்கும், மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர், திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான, முதல் பெண் வேட்பாளர் என்கிற முறையில், உங்களை ஆதரித்து, சென்னையில், நடைபெற்ற மாபெரும் மகளிர் பேரணியின்போது, முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், “உங்களுடைய அரும்பணிகளுக்கு அரிய துணையாக, நாமெல்லோரும் இருப்போம்," என்று சொன்னதை நினைவு கூர்ந்து,

மேதகு இந்தியக் குடியரசுத் தலைவராகிய உங்களை, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, உரையாற்ற வருகை தந்துள்ள, மேதகு தமிழ்நாடு ஆளுநர், திரு.சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களே! முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எந்நாளும் இனிய நண்பராக உள்ள உங்களை, மாநாட்டுத் தலைமைக் குழுவின் சார்பில், வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தொடக்க விழாவின் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களே! “தமிழகத்தின் பெருமையைச், சங்ககாலம் போல, மீண்டும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு உயர்த்தவேண்டும் என்ற, கனவை நனவாக்க விடாமுயற்சி மேற்கொண்டுள்ள, சிறந்த அறிஞர் கலைஞர்" என்று, டாக்டர் மு.வரதராசனார் உள்ளிட்ட, தமிழறிஞர்களால் பாராட்டிப் போற்றப்பட்டுள்ள உங்களை; இங்கே கூடியிருக்கும் தமிழ்மக்களின் சார்பாகவும், மற்றும் அனைவர் சார்பாகவும், வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

தகுதியுரை வழங்கவுள்ள, மாண்புமிகு நிதியமைச்சர் மதிப்பிற்குரிய இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களே!

தலைவர் கலைஞர் அவர்களோடு என்றென்றைக்கும், இணைந்து, ஈடற்ற பணியாற்றிவரும் உங்களை, மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார்பாக வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களே! சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களே! பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களே! மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும், பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களே! உறுப்பினர்களே! தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே, அலுவலர்களே! ஆசிரியப் பெருமக்களே! தொழிலாளத் தோழர்களே! பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே! உங்கள் அனைவரையும் வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

“தமிழ்மொழி, உலகின் மிக உயர்ந்த செவ்வியல் இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும், பெற்றுத் திகழும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்பதனை, நான் எவ்விதத் தயக்கமுமின்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன்" என்று பிரகடனம் செய்து, - பன்மொழிப் புலவராகத் திகழும், ஆய்வரங்க ஆலோசனைக் குழு உறுப்பினர், அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களே! உங்களை வருக! வருக! என்று வரவேற்கிறேன்.

“தமிழ், இன்று ஒரு மாநில மொழி மட்டுமன்று; ஒரு நாட்டுமொழி மட்டுமன்று; அது ஒரு குவலயக் குடும்பத்தின் தாய்மொழி. தமிழ், உலகு தழுவி வாழும், ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழி என்பது, உலகு ஒப்பிய உண்மை" என்று எடுத்தியம்பிய, உலகத் தமிழாய்வு நிறுவனம் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆகியவற்றின் துணைத் தலைவர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களே! உங்களை வருக!வருக என்று வரவேற்கிறேன்.

தமிழ் ஆய்வு, மற்றும் தமிழ் விமர்சனம் ஆகியவற்றைப், பல்துறை சார்ந்த பரிமாணங்களில், வெளிப்படுத்தும் திறன் மிக்கவரும்; தமிழ்ச் சமூக வரலாற்றை, பல்வேறு தரவுகளின் ஊடாகஎழுதும் வாய்ப்பினைப்பெற்று, சரியான புரிதலை உருவாக்கிய; முதுதமிழ்ப் பேராசிரியருமாகிய, மாநாட்டு ஆய்வரங்கத்தின் அமைப்புக் குழுத் தலைவர், இலங்கை நாட்டுப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே! உங்களை வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

“சிந்துசமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; அங்கே இருந்தவர்கள் திராவிட மொழி பேசியவர்களே" என்று, உலகெங்கிலும் உள்ள ஆய்வறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவரும்,

முதல், “கலைஞர் செம்மொழி விருதினைப்" பெற்று, ஏற்புரை ஆற்ற வருகை தந்திருக்கும், பின்லாந்து நாட்டுப் பேராசிரியர், அஸ்கோ பர்ப்போலா அவர்களே! உங்களை வருக!வருக! என்று வரவேற்கிறேன்.

தமிழ்ச் சான்றோர்களே! தமிழறிஞர்களே!
தமிழ் ஆர்வலர்களே!

“வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; அன்னார், உள்ளத்தால் ஒருவரே!
மற்றுடலினால் பலராய்க் காண்பார்!"

-என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல்வரிகளுக்கேற்ப; இங்கே ஆயிரம், பல்லாயிரம், இலட்சோப லட்சமெனத் திரண்டிருக்கும் தமிழ்ப் பெருமக்களே! உங்கள் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்!

தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வன்மை, தாய்மை, தூய்மை, செம்மை, முழுமை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய அனைத்தையும், பெற்றுள்ள ஒரேமொழி தமிழ்மொழி தான் என்று, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறிவித்தார்.

தமிழை - அமுதத் தமிழ், இன்பத் தமிழ், இனிமைத்தமிழ், கனித்தமிழ், கன்னித் தமிழ், கன்னல் தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழ், தனித்தமிழ், தாய்த்தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ், சுந்தரத் தமிழ், தூய தமிழ்,தெள்ளு தமிழ், தேன்தமிழ், தேமதுரத்தமிழ், பைந்தமிழ், படைத்தமிழ், பொற்றமிழ், நற்றமிழ், மங்காத்தமிழ், மாத்தமிழ், முத்தமிழ், வாழும்தமிழ், வளரும்தமிழ், வற்றாத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வெற்றித்தமிழ் - என்றெல்லாம் புலவர்களும் அறிஞர்களும், போற்றிப் புகழ்ந்துரைத்து இருக்கின்றார்கள்.

தமிழ், உலகின் மூத்த மொழி மட்டுமல்ல; முதல் செம்மொழியும் ஆகும். அதனால்தான், பாவேந்தர் பாரதிதாசன்,

கனியிடை ஏறிய சுளையும்-
முற்றல், கழையிடை ஏறிய சாறும்;
பனிமலர் ஏறிய தேனும்,-
காய்ச்சுப், பாகிடை ஏறிய சுவையும்;
நனி பசு பொழியும் பாலும்-
தென்னை, நல்கிய குளிர் இளநீரும்;
இனியன என்பேன்; எனினும், -
தமிழை, என்னுயிர் என்பேன் கண்டீர்!" - என்று உலகுக்குப் பிரகடனம் செய்தார்.

அண்ணல் காந்தியடிகள்; “எனது வாழ்க்கையில், ஏதாவது ஒன்றைப் பற்றி நான் வருந்துகிறேன் என்று சொன்னால், அது உயர்ந்த மொழியாகிய, தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லையே, என்பது பற்றித்தான்" என்று தமிழ்மொழியை பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அத்தகைய இனிமையும் தனித்தன்மையும், வாய்ந்தது தமிழ்மொழி.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த .ஜி.யு.போப் அவர்கள், ஒரு தமிழனாகப் பிறக்கவில்லையே என ஏங்கினார். அவர், தான் தமிழ் மொழியின்பால் கொண்ட பற்றின் அடையாளமாக, தமது கல்லறையில், “ஜி.யு.போப், ஒரு தமிழ் மாணவன்" என்று பொறிக்க வேண்டுமென விரும்பினார்.

அத்தகைய ஈர்ப்பும், இன்பமும் கொண்டது தமிழ்மொழி. அத்தமிழ் மொழியை, முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதற்கான, வழிவகைகளை வகுத்துச் செயல்படுத்திட, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, தலைவர் கலைஞர் அவர்கள் இங்கே கூட்டியிருக்கிறார்கள்.

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை, மூச்சினை உனக்களித்தேனே! நைந்தாய் எனில், நைந்துபோகும் என்வாழ்வு; நன்னிலை உனக்கெனில், எனக்கும் தானே!" - என்ற உள்ளத்து உணர்வோடும், எழுச்சியோடும், இங்கே திரண்டிருக்கும், உங்கள் அனைவரையும் வருக! வருக! என்று, உள்ளன்போடு, மகிழ்வோடு வரவேற்று விடைபெறுகிறேன் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X