For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் தென் மாநிலங்களில் லாரிகள் ஸ்டிரைக்- காய்கறி, உணவுப் பொருட்கள் விலை உயரும்

By Chakra
Google Oneindia Tamil News

Lorries
சென்னை: டீசல் விலையைக் குறைக்கக் கோரியும், சுங்க வரியை (toll gate tax ) ரத்து செய்யக் கோரியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது.

இதில் சுமார் 22 லாரிகள் பங்கேற்பதால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் விலை உயரும் என்று தெரிகிறது.

தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தரை வழி போக்குவரத்து கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா நிருபர்களிடம் கூறுகையில்,

1997ம் ஆண்டு மத்திய அரசு லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி சுங்க வரி தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வாகனங்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு, சுங்க வரி வசூல் செய்யப்பட்டது.

கிலோ மீட்டருக்கு ரூ.1.45 என்று இருந்த சுங்க வரி கடந்த 2008ம் ஆண்டு அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் ரூ.3.45 என்று உயர்த்தப்பட்டது. மேலும் வாகனங்களும் 6 வகையாக பிரிக்கப்பட்டன. இதனால், லாரி உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

தற்போது ஜி.எம்.ஆர்., எல்.அண்ட்.டி., ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் சாலைகளைப் போட்டுவிட்டு சுங்க வரி வசூலிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் வலியுறுத்தலின் பேரில் சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ரூ.170 ஆக இருந்த சுங்கக் கட்டணம் தற்போது ரூ.330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயலில் இருந்து தாம்பரம் வரை 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள பைபாஸ் சாலையில் ரூ.325 சுங்க வரி வசூலிக்கின்றனர்.

எனவே, மத்திய அரசு கிலோ மீட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். தற்போது, வாகனப் போக்குவரத்து 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு விகிதாச்சார அடிப்படையில் சுங்க வரியை குறைக்க வேண்டும்.

மேலும், டீசல் மீதான விற்பனை வரியை மாநில அரசு வாபஸ் பெற வேண்டும். டயர் மீதான வரி உயர்வையும் குறைக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 1ம் தேதி (நாளை) நள்ளிரவு முதல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் லாரிகள் ஓடாது. இந்த வேலை நிறுத்தத்தில் 23 லட்சம் லாரிகள் பங்கேற்கின்றன. இதனால், அரசுக்கு தினமும் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும்.50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

4 நாட்களுக்குள் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்காவிட்டால், 6ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந் நிலையில் சேலத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன்,

இந்தியாவில் உள்ள தனியார் சுங்கச் சாவடிகளில் 70 சதவீதம் தென் மாநிலங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 60 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உள்ளன. எனவே தமிழகத்தில் இயங்கும் லாரிகளுக்கும், தமிழகம் வழியாக செல்லும் லாரிகளுக்கும் பாதிப்பு மிக மிக அதிகம்.

வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புவதற்கான பதிவு இன்று முதல் நிறுத்தப்படுகிறது.

எங்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், உணவு எண்ணெய் (எடிபில் ஆயில்) ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் சங்கம், எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம், சேலம் மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம், சுமை தூக்குவோர் சங்கத்தினர் போன்ற லாரி தொழில் சம்பந்தப்பட்ட பிற தொழில் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக முதலில் காய்கறிகள் போக்குவரத்து பாதிக்கப்படும், அதன் பிறகு பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்தும், எல்.பி.ஜி. சமையல் கேஸ் வினியோகமும் பாதிக்கப்படும். மேலும் லாரி சார்ந்த அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்.

மொத்தத்தில் இந்த 4 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 5,000 கோடி வருமான இழப்பு ஏற்படும். அதேபோல் ரூ.10,000 கோடி மதிப்பிலான சரக்கு போக்குவரத்தும் முடங்கும் என்றார்.

கேஸ், பெட்ரோலிய டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டால் சமையல் எரிவாயுவுக்கும் பெட்ரோல்-டீசலுககும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X