மதுரையில் ஜெ. கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு-அதிமுக வழக்கு

திருச்சியில் வருகிற 14ம் தேதி ஜெயலலிதா தலைமையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மதுரையில் ஆகஸ்ட் 24ம் தேதி வாக்கில் மாபெரும் பொதுக் கூட்டம் ஜெயலலிதாவில் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதை தமுக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிட்டு காவல்துறையிடம் அதிமுக சார்பில் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதை காவல்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து அதிமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில்,
அதிமுக மதுரை மாவட்ட கழகம் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடத்த ஆகஸ்ட் 24 உள்பட மூன்று தேதிகளை குறிப்பிட்டு மதுரை மாநகராட்சி அலுவலகத்திலும், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகமும் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் அனுமதி தர மறுத்து விட்டனர்.
எனவே, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மாநகராட்சி அதிகாரிக்கும், மதுரை போலீஸ் கமிஷனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.