ஆசிரியர் தேர்வில் ஒரு குளறுபடியும் இல்லை-ஜெ.வுக்கு கருணாநிதி பதில்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஆசிரியர் தேர்வில் ஊழல் மலிந்து விட்டது என்று ஜெயா அலறித் துடித்திருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பலர், ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர் என்பதுதான்.
ஜெயாவுக்கு விஷயம் தெரியாவிட்டால் யாராவது தெரிந்தவர்களிடம் விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது. தான் மெத்தப் பெரிய மேதாவி, தனக்குத் தெரியாததே எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டால் இது போன்ற தவறான விஷயங்களை எழுதிவிட்டு, பிறகு வாங்கிக் கட்டிக் கொள்ளத் தான் வேண்டும்.
ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தனது பெயரை வேலை வாய்ப்பகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் பதிவு செய்து வைத்திருப்பார்; முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் பதிவு செய்திருப்பார். ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியரைத் தேர்வு செய்யும்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தால் அனுப்பப்படும் இரண்டு பட்டியல்களிலும் அவர் பெயர் இடம் பெற்று, அவர் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்படுவது இயல்புதான். அவர் எந்தப் பணி தனக்கு உகந்தது என்று தீர்மானித்துக் கொண்டு, தான் விரும்பும் பணியிலே சேரலாம்.
அரசால் வழங்கப்பட்ட ஆணைகள் மற்றும் நடைமுறை விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துத் தேர்வுப்பணிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2009 2010ம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் சுய விவரப் படிவங்களில் “தாங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ளாரா?" என்ற வினாவிற்கு அப்படித் தேர்வு செய்யப்பட்ட விவரம் விண்ணப்பதாரர்களால் தெரிவிக்கப்படாததால் 25 பெயர்கள் 2009 2010ம் ஆண்டிற்கான தேர்வுப் பட்டியலில் மீண்டும் இடம்பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 25 பேர்கள்; 2009 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணையதள தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றது பின்னர் தெரியவந்ததையடுத்து அவர்களது தேர்வு முறைப்படி ரத்து செய்யப்பட்டது. இரண்டாவதாக தேர்வு பெற்றமைக்கு அவர்களுக்கு எந்தவிதமான ஆணைகளும் இவ்வாரியத்தின் மூலம் அனுப்பப்படவில்லை. இந்த விஷயம் புரியாமல் ஜெயா அறிக்கை விடுத்திருக்கிறார்.
283 தமிழாசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 256 பேர் இவ்வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பிட்ட இனச்சுழற்சியில் தகுதியுடையோர் கிடைக்கப் பெறாததால் 8 பணியிடங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட 19 பணியிடங்களையும் சேர்த்து 27 பணியிடங்கள் நீங்கலாக 256 பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் இந்த வாரியத்தின் இணையதளத்தில் முறைப்படி வெளியிடப்பட்டது.
2009 2010 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின்படி தகுதியுடைய 196 பேர் தேர்வு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. 9 பணியிடங்களுக்கு தகுதியுடையோர் கிடைக்கப்பெறாததாலும், ஒரு பணியிடம் நீதிமன்ற ஆணையின்படி நிறுத்தி வைக்கப்பட்டதாலும் 10 பணியிடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் 29. 6.2010 அன்றும் மீண்டும் 22.7.2010 அன்றும் விரிவான செய்திக் குறிப்பினை வெளியிட்டு, அவை ஏடுகளிலும் வெளி வந்துள்ளன.
தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், இந்த வாரிய இணையதளத்தில் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையான முறையில் வெளியிடப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் எந்தவிதமான குளறுபடியோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.