• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இறுதி வரை போரிட்டே வீர மரணமடைந்தார் பிரபாகரன்'-கேபி

By Chakra
|

Prabhakaran
இலங்கை: ராணுவத்திடம் பிரபாகரன் சரணடையவில்லை. அவர் தனது படையுடன் இறுதிவரை தீரமாகப் போரிட்டு 'வீரமரணம்' அடைந்தார், என்று கூறியுள்ளார் கேபி எனும் குமரன் பத்மநாதன்.

இறுதிப் போரில் புலிகள் தோற்று, தலைவர் பிரபாகரனும் களத்தில் 'இல்லை' என்றான சூழலில், புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் கேபி. ஆனால் அடுத்த சில தினங்களில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். இலங்கை கொண்டு வரப்பட்டு ரகசிய விசாரணை செய்யப்பட்டார். கொஞ்ச காலம் அவரைப் பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.

ஆனால் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அவரைப் பற்றிய செய்திகளும், அவர் அளிக்கும் பேட்டிகளும் இலங்கை ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இப்போது வடக்கு கிழக்கு புணரமைப்பு அமைப்பின் செயலராக உள்ள கேபி, உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் நிதி பெற்று அதனை, வடக்கு கிழக்கு புணரமைப்புக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு அவர் மிக நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் இந்த வாரம் வெளியாகியுள்ள பகுதியில், பிரபாகரன் எப்படி 'கொல்லப்பட்டார்' என்று மிக விரிவாக விளக்கியுள்ளார்.

அவர் கூறியுள்ளவற்றில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்...

"பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. அதனை காஸ்ட்ரோ தருவதாகக் கூறினார். ஆனால் கடைசி வரை தரவே இல்லை.

பிரபாகரனைக் காப்பாற்றிய பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே என்று அவர்களுக்குப் பொறாமை. அதனால்தான் இப்படி ஆனது. இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம்.

அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது.

அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன்.

ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.

அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது.

ராணுவத்தின் மிக உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் பிரபாகரனின் இறுதி நேர போரைப் பற்றி மிக பெருமையாகக் கூறினார். அந்த அதிகாரி யார் என்பதை நான் சொல்ல மாட்டேன். கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல் பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார். இதை ராணுவம் உறுதிப்படுத்தியது.

பிரபாகரனின் குடும்பத்தினர் மொத்தமாக இந்த சண்டையில் இறந்துவிட்டதும் உண்மையே. சாள்ஸ் ஆண்டனி அவர்களைக் காக்க கடைசி வரை முயன்றார்.

பிரபாகரனின் மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் போரில் இறந்தனர். துவாரகாவும் புலிகள் இயக்கத்தில் போராளியாகவே இருந்தார். பிரபாகரன் மனைவி மதிவதனி மே 14ம் தேதியே இறந்துவிட்டார்.

பிரபாகரன் தனது மகனையும் மகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார் என்று சிலர் கூறுவதில் உண்மையில்லை. பிரபாகரன் தனது பிள்ளைகள் வெளிநாடு செல்வதை அனுமதிக்கவில்லை. அவரது குடும்பம் முழுவதும் இயக்கத்தில்தான் இருந்தது.

பிரகபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மீது எனக்கு பாசம் அதிகம். அவனது மரணம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது. அவனிடம் அடிக்கடி நான் போனில் பேசியிருக்கிறேன். கடைசி நேரத்தில் கேபி மாமாவுடன் நான் போகப் போகிறேன் என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தானாம். அதை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது...", என்று அவர் கூறியுள்ளார்.

(பிரபாகரன் மரணம் அறிந்து வைகோ குலுங்கி அழுதார்-கேபி பேட்டியின் தொடர்ச்சி நாளை)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X