For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாநில அரசே ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த வேண்டும்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசுக்காக காத்திருக்காமல் மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கை.

பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, அவர்களின் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.

இந்த வழியில் வந்ததாக உரிமை கொண்டாடுகிறவர்கள், யாரும் வற்புறுத்தாமல், யாரும் கோரிக்கை வைக்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

ஆனால், இதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, சமூக நீதிக்கோ, நீதிக் கட்சியின் கொள்கைக்கோ எதிரானது என்று சொல்ல முடியுமா?. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதுவரை கணக்கு இல்லாவிட்டால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு எவ்வளவு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால், மாநில அரசு இடஒதுக்கீட்டின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதற்காக புதிய சட்டமும் இயற்றலாம் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக நீதியில் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும், இந்த அனுமதி கிடைத்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசு யாரும் கோரிக்கை வைக்காமலேயே, வரும் நவம்பர் மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், சமூக நீதி கொள்கைக்கு எங்களைத் தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்? என்று கேட்கும் தமிழக முதல்வர் கருணாநிதி அகில இந்திய அளவில் முயற்சி நடப்பதால், இங்கே தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க முன்வராமல், பொறுப்பை தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இது இரட்டை நிலை இல்லையா?

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பரிசீலிக்கலாம் என்ற நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. ஆனால், தமிழக அரசின் நிலை அப்படி அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கடமையையும், பொறுப்பையும் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் சுமத்தியிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள் கணக்கெடுப்பை செய்து முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கெடு முடிவதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக இடஒதுக்கீடு அளவை முடிவு செய்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இப்போது இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை:

இந் நிலையில் சேலத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதல்அமைச்சரிடம் செய்தியாளர்கள் மீண்டும் மதுவிலக்கு வருமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் பரிசீலனை செய்வோம் என்று தான் கூறினோம். எத்தனை நாள் என்று கூறவில்லை என்று கூறி மக்களை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார். போராட்டங்கள் நடத்திய மதுக்கடை ஊழியர்களை மிரட்டுவதற்கு இந்த அறிவிப்பை ஒரு ஆயுதமாக அவர் பயன்படுத்தி இருக்கிறார் என நினைக்கிறேன்.

வீதிதோறும் மதுக் கடைகளை திறந்து வைத்து, மது குடித்தால் உடலுக்கு கேடு என எழுதி வைத்து விட்டு புதிய புதிய மது ஆலைகளை திறக்க அனுமதி தந்து மது விற்கப்பட்டும் வருகிறது. 13 வயது பள்ளி சிறுவன் கூட குடிக்க ஆரம்பித்துவிட்டான். 1971க்கு பிறகு பல தலைமுறை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை தமிழக முதல்வர் தட்டிகழித்து வருகிறார். யாரும் கேட்காமலே புதுச்சேரி முதல்வர் நவம்பருக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தருவேன் என கூறி உள்ளார்.

ஆனால் இங்கே ரூ.400 கோடி செலவாகும். இதனால் மத்திய அரசு பணம் தந்தால் கணக்கெடுப்போம் என தட்டிக் கழிக்கிறார்கள். ரூ. 4,000 கோடி செலவானாலும் பரவாயில்லை. இது அவசியமானது. இதை தமிழக அரசுத்தான் செய்ய வேண்டும். நான் சொல்வதற்காக இல்லாமல், உச்சநீதிமன்ற ஆணைக்காக செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டு கொள்கிறேன். இல்லையெனில் 69 சதவீத இட ஒதுக் கீடுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு தேவையில்லை. பழைய வாக்குசீட்டு முறை வேண்டும் என ராஜ்யசபாவில் இன்று குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சேலம் ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரயில்வே கோட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இந்த பகுதியில் 7அமைச்சர்கள் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை.

காவிரி உரிமையை நாம் இழந்தோம். ஒரு இனம் அழிவிற்கு காரணமாக நாம் இருந்திருக்கிறோம். ஈழ அரசையே நடத்தி வந்த ஒரு இயக்கம் முற்றிலும் அழிவதற்கு நாம் காரணமாக இருந்தோம்.

காவிரி பாலாற்றுடன் முதலில் இணைக்க வேண்டும். வைகை தாமரபரணியுடன் இணைக்க வேண்டும். ஆனால் காவிரியையும், வைகையையும் இணைக்க பேசுகிறார்கள். பாலாற்றில் நீரை பார்த்து பல ஆண்டாகி விட்டது.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் அறிவிப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்றார்.

கேள்வி: பாமகவில் உள்ளவர்கள் மதுகுடித்தால் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: இன்று கூட மாநில இளைஞர் அணி கூட்டம் நடந்தது. அதில் பேசிய அன்புமணி, நிர்வாகிகளிடம் மது குடிக்ககூடாது. அது தெரிந்தால் பதவியை பறித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

கேள்வி: சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அது செயல்பட ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.

பதில்: இது தொடர்பாக பாமக போராட்டம் நடத்தும். அதே போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட, மாவட்ட தலைநகர்களில் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும்.

கேள்வி: பல கட்சியினரும் திமுகவில் இணைந்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: எதிர்க் கட்சியைச் சேர்ந்த, சேலத்துக்கு பக்கத்து மாவட்டத்துக்காரர் (செல்வகணபதி?) மீது ஊழல் புகார் இருக்கிறது. ஆனால், அவர் திமுகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகிவிட்டார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X