• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக்கும், தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் தொடர்கிறது-நெடுமாறன் வேதனை

|

புதுச்சேரி: தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளதை அறியலாம் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

புதுச்சேரித் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் தனித்தமிழில் நாளிதழ் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு நிதி திரட்டினர். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பொறுப்பாளராக விளங்கிய முனைவர் இரா.திருமுருகனும், பொருளாளர் தி.ப.சாந்தசீலனார் அவர்களும் அடுத்தடுத்து இயற்கை எய்தியதால் தனித்தமிழ் நாளிதழுக்குத் திரட்டப்பட்ட தொகயைத் தமிழ், தமிழின வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றும் தென்செய்தி இதழுக்கு வழங்கத் தீர்மானித்தனர்.

அவ்வகையில் தென்செய்தி இதழாசிரியர் பழ.நெடுமாறன் அவர்களிடம் இரண்டரை இலக்கம் உருவா நிதியினை இன்று (30.08.2010) மாலை புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அறக்கட்டளையின் தலைவர் செம்பியன், பொருளாளர் தி.ப.சா.நர்மதா, முனைவர் தமிழப்பன், மு.வ.பரணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி வழங்கினர்.

நிதியினை ஏற்றுக்கொண்ட பழ.நெடுமாறன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அரியதோர் உணர்வுரையாற்றினார். அவர் உரையிலிருந்து சில பொறிகள்:

தமிழ்நாடு என்ற பெயரில் மதுரையிலிருந்து திரு.தியாகராச செட்டியார் தமிழில் நாளிதழ் நடத்தினார். அந்த இதழ் இடையில் நின்றாலும் அதன் தாக்கம் தமிழ் இதழியல் வரலாற்றில் காணப்படுகின்றது. இந்த இதழில் தமிழறிஞர்கள் மா.இராசமாணிக்கனார், ஒளவை. துரைசாமியார், அ.கி.பரந்தாமனார் உள்ளிட்ட அறிஞர்கள் பணிபுரிந்தனர்.

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தமிழ் ஓசை என்ற நாளிதழைச் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வெளிவரும்படி நடத்தினார். இன்று சென்னையிலிருந்து மட்டும் பெரும் பொருள் இழப்புகளுக்கு இடையே வெளிவருகின்றது.

இதழியல் துறை இன்று வணிகமயமாகி விட்டதால் தமிழ் உணர்வு சார்ந்த செய்திகளை வெளியிடும் ஏடுகள் வெளிவருவதில் சிக்கல் உள்ளது. தமிழார்வலர்களால் வணிக இதழ்களுக்கு நடுவே போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.

நானும் செய்தி என்ற பெயரில் (1972-76) மதுரையிலிருந்து நாளிதழ் வெளியிட்டேன். பின்னர் நிறுத்தினேன். இதழ்கள் இன்று வணிக மயமானதால் மொழி, இனம் பற்றி எழுதுவதில்லை. பரபரப்பு செய்திகளை வெளியிட்டு ஆதாயம் அடைகின்றனர்.

பிரான்சு நாட்டில் பிரஞ்சு அகாதெமி மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றது. அங்கெல்லாம் 96 பக்கத்தில் இதழ்கள் வெளிவருகின்றன. ஒரு இதழில் மூன்று ஆங்கிலச் சொல்லைக் கலந்து எழுதியமைக்கு அந்த இதழ் ஆசிரியர் பிரஞ்சு அகாதெமிக்கு அழைக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டார். ஆனால் தமிழகத்தில் ஆங்கிலமும்,சமற்கிருதமும் கலந்து எழுதப்படுகின்றன.

சிற்றிதழ்கள்தான் இன்று தமிழ்மொழி,தமிழ்த் தேசியத்திற்குப் பாடுபடுகின்றன. தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. இவை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையேதான் வெளிவருகின்றன. திராவிட இயக்க ஏடுகள் முந்நூறுக்கும் மேல் வெளிவந்தன.

தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புலவர்களும் மன்னர்களும் இணைந்து இப்போரில் வெற்றி கண்டனர்.

வடமொழி ஆதிக்கத்தால் தமிழ் சிதைந்து தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என்று பிரிந்தது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் தந்த தமிழர்கள் கேரளர்களாக மாற்றம் அடைந்து எதிரிகளாகி விட்டனர்.

மொழியடிப்படையில் அழிவுகளைத் தொடங்கியதால் அரசன் பெயர், ஊர்ப்பெயர், கோயில்களின் பெயர், இறைவன் பெயர், ஆறுபெயர், குளம் பெயர் யாவும் வடமொழியாயின. மணிப்பிரவாள நடை உருவானது. அவற்றைப் புலவர்கள் தடுத்து நிறுத்தினர். இருபதாம் நாற்றாண்டில் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், தங்கப்பா, இரா.திருமுருகனார் உள்ளிட்ட அறிஞர்கள் தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் நான் கிருஷ்ணன் என்ற பெயரில் இருந்தவன் நெடுமாறன் ஆனேன்.

எனவே தான் தொடர்ந்து தமிழ்ப் பகைவர்கள் மொழியையும் இனத்தையும் பல சூழ்ச்சி செய்து அழித்து வருகின்றனர். இரண்டாம் உலகப்போரில் மாண்டதை விட ஈழத்தமிழர்கள் இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நம் காலத்திலேயே தமிழ் அரியணை ஏற வேண்டும் என்றார் நெடுமாறன்.

நிகழ்ச்சியில், பொருளாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட செல்வி தி.ப.சா.நர்மதா நன்றி கூறினார்.

நன்றி: http://muelangovan.blogspot.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X