காங். கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமதாதான் மாவோயிஸ்ட் ஆதரவாளர்-கருணாநிதிக்கு எச்சூரி பதிலடி

மாவோயிஸ்ட் நக்சலைட் வன்முறையை தமிழகத்தில் பரப்ப முயலுகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கடுமையாக சாடியிருந்தார் முதல்வர் கருணாநிதி. இதற்கு எச்சூரி சேலத்தில் பதிலளித்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மூத்த அரசியல்வாதியான தமிழக முதல்வர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்பதுபோல் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சமூக மாற்றத்தை உருவாக்க தற்போதைய ஜனநாயக முறையில் நம்பிக்கை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள்தான் மாவோயிஸ்டுகள்.
எங்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாட்டை அறியாதவராக முதல்வர் பேசியிருக்கிறார். கடந்த 1967-ல் இருந்து வன்முறையை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புமாறு மாவோயிஸ்டுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மேற்கு வங்கத்தின் எல்லையோரப் பகுதிகளில் இப்போது உள்ள மாவோயிஸ்டுகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் இறக்குமதி செய்யப்பட்டவர்கள். இக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை எதிர்த்துப் பேசியதுடன் அவர்களைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறார். அவர் இடம் பெற்றுள்ள மத்திய அரசில்தான் தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு ஒத்துவராத, வன்முறைப் பாதையில் இருந்து விலகி வரும் மாவோயிஸ்டுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்படுவோம். நேபாளத்தில் வன்முறை அரசியலை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு வந்ததால்தான் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆதரித்தோம். இதை முதல்வர் அறிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார்.
மாவோயிஸ்டுகளை தடை செய்ய நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவது மாநில அரசின் கடமையாக உள்ள நிலையில் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மார்க்சிஸ்ட் ஆளும் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதை அவர் அறிய வேண்டும். எனவே எங்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி அவர் பேசியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
மாவோயிஸ்டுகள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அவரது அமைச்சரவையில் இருப்பவரே மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார். இதை பிரதமர் எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்று தெரியவில்லை. இது குறித்து அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரிமை பிரச்னை எழுப்ப இருக்கிறோம் என்றார் எச்சூரி.