கடையநல்லூரில் பொறியியல் மாணவர் பன்றிக்காய்ச்சலுக்குப் பலி
கடையநல்லூர்: பன்றி காய்ச்சலுக்கு கடையநல்லூரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் பலியானார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாவரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கசாமி. விவசாயி, இவரது மகன் சரவணன். இவர் வேலூரில் உள்ள கல்லூரியில் என்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
அவரது நண்பர்கள் சிலர் உடனே சரவணனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணனுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படியும் கூறி உள்ளனர்.
உடனே சரவணனை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்தம் மற்றும் சளி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் சரவணனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று இறந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சிஅடைந்த அவர்கள் கதறி அழுதனர். பின்னர் இங்கிருந்து பெற்றோர், உறவினர்கள் சிலர் சென்னை சென்று உடலை பெற்றுக் கொண்டனர். அப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடலை ஊருக்கு கொண்டு சென்றதும் எரித்து விடுங்கள் என்று கூறியதோடு, உடலை வாங்க சென்ற அனைவருக்கும் தடுப்பூசி போட்டு அனுப்பினர்.
மகனின் உடலுடன் நேற்று நள்ளிரவு ஊருக்கு வந்த அவர்கள் இன்று காலை உடலை புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவியதால் 18 பேர் பலியாகினர்.
அதில் இருந்து பொதுமக்கள் மீண்டு வந்த நிலையில் தற்போது பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.