For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் தேமுதிக மாநில மாநாடு-விஜயகாந்த் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: தேமுதிகவின் மாநில மாநாடு ஜனவரி மாதத்தில் சேலத்தில் நடைபெறும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

"இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே'', என்னும் மூல முழக்கத்தோடு 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாள், மக்கள் கடலில் மதுரை மாநகரில் தே.மு.தி.க. துவங்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து இன்று 6வது ஆண்டில் வீறு நடைபோட்டுக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொண்டர்கள் தங்களது வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இந்த மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்.

இருகரம் கொண்டு ஏற்றிய விளக்கை ஏந்தி காப்பாற்றுவதைப் போல, இந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் காப்பாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், இன்று தே.மு.தி.க. ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உள்ளது.

ஒரு கட்சியைத் துவங்கி நடத்தினால் மட்டும் போதாது. மக்களின் பேராதரவு கிடைத்தால் மட்டுமே அரசியலில் அந்தக் கட்சி தலை நிமிர்ந்து நிற்க முடியும். தே.மு.தி.க. துவங்கப்பட்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்தது. 11 இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டது.

தொடர்ந்து தனித்து நின்றபொழுதும் பணம், பதவி, பலாத்காரம் போன்றவை தேர்தல்களில் கட்டவிழ்த்து விட்டபோதும் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மலர்வதற்கு மக்கள் தே.மு.தி.கவுக்கு பேராதரவு தந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவாவதற்கு மக்கள் தொடர்ந்து அளித்து வரும் அரவணைப்பும், ஆதரவுமே காரணமாகும். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாடெங்கும் சிற்றூர்களிலும், குக்கிராமங்களிலும், மூலை முடுக்குகளிலும் சிதறிக் கிடக்கின்ற நாம் எல்லோரும் ஒரு சேர கூடுவதற்கு, ஒருவரோடு ஒருவர் உறவு பாராட்டுவதற்கு, மேலும் மேலும் முன்னேறுவதற்கு, ஜாதி, மதம் என்ற வேறுபாடு பாராமல் நாம் அனைவரும் ஏற்றத் தாழ்வை மறந்து ஒரே மாநாடாக கூட வேண்டும் என்பதே எனது ஆசை. ஆகவே தே.மு.தி.க. சார்பில் ஒரு மாநில மாநாடு நடத்துவதென திட்டமிட்டுள்ளேன்.

ஜனவரி மாதம் பொங்கல் விழாவுக்குரிய சிறப்பான மாதமாகும். நமது மாநில மாநாட்டை வரும் 2011ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில், சேலம் பகுதியில் நடத்தலாம் என உள்ளேன்.

தே.மு.தி.கவின் வளர்ச்சிப் பாதையில் இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த மாநாட்டில் கழகத் தொண்டர்களும், கழக ஆதரவாளர்களும், தாய்மார்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள், மின்வெட்டு, குடிதண்ணீர்ப் பற்றாக்குறை, சுகாதார கேடுகள், படிப்பறிவின்மை போன்ற பலவற்றால் தமிழ்நாடு பீடிக்கப்பட்டு இருக்கிறது. ஆளும் வர்க்கத்தினர் மக்களின் வாக்குச் சீட்டுக்களைப் பணம் கொடுத்து பறிக்க முயல்கின்றனர்.

ஏழைகளே இல்லாத நாடு, தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட துடிக்கிறோம் நாம். ஏழைகள் இருந்தால்தான் இலவசம் தந்து, மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்க முடியும் என்ற எண்ணத்தால், ஏழ்மையை நிரந்தரமாக வைத்திருக்கவே ஆட்சியாளர்கள் ஆசைப்படுகின்றனர்.

இந்த பிற்போக்குத் தனத்தை முறியடித்து தமிழ்நாட்டில் எல்லாரும் எல்லாமும் பெற, இல்லாமை அறவே அகல, ஜாதி, மத வேறுபாடு நீங்கி மனிதநேயம் மலர, ஒரு அடிப்படை சமுதாய மாற்றத்தைக் காண, அடிக்கல் நாட்டுவதாக இந்த மாநாடு அமையட்டும். இருளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு, விடியலைக் காணட்டும். புதியதோர் சமுதாயம் காண பொழுது புலரட்டும். இதற்கான ஒரு திருப்புமுனையை தமிழ்நாட்டில் தே.மு.தி.க. மாநாடு ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X