• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெட்கமில்லாத, வேண்டாத விருந்தாளி ஜெ! - கருணாநிதி காட்டம்

By Chakra
|

Karunanidhi
காங்கிரஸ் கட்சி உறவை மறுத்த போதிலும் வெட்கமில்லாமல் வேண்டாத விருந்தாளியாக ஆதரகவு தர வருகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒன்றினை 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைக்க வேண்டுமென்று அ.தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நீங்கள் அஞ்சுவதாகவும், அதைப் பார்த்தால் "மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்'' என்ற பழமொழி தனக்கு ஞாபகத்திற்கு வருவதாகவும் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஜெயலலிதா, மத்திய அமைச்சராக இருந்த ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, மத்திய அரசை தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி வேறு சில கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து ஆதரிக்க தான் ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தானாகவே முன்வந்து அறிக்கை விடுத்தாரே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டுமென்றோ, ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றோ முதலில் கோரவில்லை.

ஜெயலலிதாவின் முகத்திலே கரியைப் பூசுகின்ற அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அ.தி.மு.க. உறவை மறுத்து, அவருடைய கட்சியின் சார்பில்; வேண்டாத விருந்தாளியாக தானாகவே ஆதரவு தருகிறேன் என்று வெட்கமில்லாமல் தெரிவித்த ஜெயாவின் அறிவிப்பை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

ஜெயலலிதா முதலில் சொன்னதெல்லாம் ராஜா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அவருடைய விருப்பம் நிறைவேறாத அளவிற்கு, தி.மு.க. தானாகவே முன்வந்து நாடாளுமன்றம் கூச்சல் குழப்பமின்றி ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டும்; மக்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; என்ற எண்ணத்தோடு அமைச்சர் ராஜாவை பதவி விலகச் செய்தது.

அதற்குப் பிறகு மத்திய அரசுக்கு பிரச்சினை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மீண்டும் போர்க் குரல் எழுப்பி பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துகொண்டு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜெயலலிதா எழுப்பத் தொடங்கினார்.

தி.மு.க. சார்பில் அந்தப் பிரச்சினையிலே மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை ஆதரிப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதே தவிர, தி.மு.க.வை பொறுத்தவரையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை வேண்டாமென்று சொல்லவே இல்லை. நான் சொன்னேனா இல்லையா என்று தெரியாத நிலையில் "என் மடியில் கனம், அதனால் பயப்படுகிறேன்'' என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டு, அந்த அறிக்கையை "தினமணி'' நாளிதழும், அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக "கருணாநிதி நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அஞ்சுவது ஏன்?'' என்று கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுள்ளது.

நான் அவ்வாறு சொன்னேனா இல்லையா என்றுகூட தெரிந்து கொள்ளாத நிலையில் அவ்வாறு வெளியிடக் காரணம் என்ன?. "ஞானசூரியன்'' என்ற தலைப்பில் சுவாமி சிவானந்தசரஸ்வதி தொகுத்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலில் சில பகுதிகள்-

* கொலைத் தொழில் புரிந்த மற்ற வருணத் தார்களைத் தூக்கில் இடவேண்டும்; பிராமணன் இத்தகைய குற்றம் புரிவானாயின், அவனது தலைமயிரை மொட்டை அடித்தலே தண்டனையாகும். "மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்டா ப்ராஹ்மணானாம் வீதீயதே இதரேஷாம்து, வர்ணானாமதண்ட; ப்ராணாந்தி கோபவேத'' (மனு)

* எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக் கிறானோ, அந்த நாடு அழிந்து போகும். எந்த இடம் பார்ப்பனர்கள் இல்லாததாக இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சம், நோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும். "யஸ்ய சூத்ரஸ்து குருதே ராஜ்யே தர்ம விவேசனம் தஸ்ய ஸீததிதத் ராஷ்ட்ரம் பங்கே கௌரிவ பஸ்யத; யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம் நாஸ்தி காக்ராந்தமத்விஜயம், வினஸ்யதயாசு தத்கரித்ஸ்னம் துர்ப்பிக்ஷம்வ்யாதி பீடிதம்'' (மனு)

* சூத்திரன் ஆட்சி புரிகிற நாட்டில் குடியிருத்தல் ஆகாது. "நசூத்திர ராஜயே திவஸேத் நதார்மிக ஜனாவ்ருதே; ந பாஷண்டி ஜனாக்ராந்தே நாபஸ்ருஷடேந்த்ய ஜேந்ருபே'' (மனு)

* பிராமணர்களை திட்டுகிற சூத்திரனைக் கொன்று விட வேண்டும். "சதம் ப்ராஹ்மணமாக்ருச்ய, க்ஷத்ரியோ தண்டமர்ஹதி; வைச்ய; ஸார்த்தசதம் சைவ சூத்ஸ்ரது வதமர்ஹதி'' (மனு)

* மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால் அவனது பொருளை கொள்ளையிடுவதோடு, ஆண்குறியையும் அறுத்துவிட வேண்டும். சூத்திரனது அழகிய பெண்ணை த்விஜர்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் பிரமாணமுண்டு. "ஆர்யஸ்த்ர்ய பிகமனே லிங்கோத்தாரா; ஸ்வஹ ரணஞ்ச'' "ஸ்த்ரீ ரத்தம் துஷ்குலாநபி'' (கோதமர் சூத்திரம்)

இப்போது புரிகிறதா? "தினமணி'' நான் சொல்லாத ஒரு செய்தியைப் பற்றி ஜெயா வெளியிட்ட அறிக்கையை வேண்டுமென்றே - முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டதற்கு என்ன காரணம் என்று!

தொடர்ந்து சிண்டு முடியும் ஜெ...

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?.

பதில்: பொதுவாக தணிக்கைத் துறை சார்பில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள் மத்திய அரசு குறித்தோ, மாநில அரசுகள் குறித்தோ இருக்குமாயின் இதுவரை முறையே அந்தந்த அவையின் பொது கணக்குக் குழுவிடம்தான் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முறையாக கடைப்பிடிக்கப்பட்ட அந்த முறையைத்தான் பின்பற்ற வேண்டுமென்று மத்திய அரசும், அதன் தோழமைக் கட்சிகள் என்ற முறையில் நாங்களும் முதலில் கருதினோம்.

அது மாத்திரமல்ல, மத்திய அரசில் தற்போது பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருப்பவர் முரளி மனோகர் ஜோஷி; பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். எனவே அவர் தலைமையிலே உள்ள பொதுக் கணக்குக் குழு ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்கலாம், ஆளுங்கட்சியின் சார்பிலே உள்ளவர் தலைமையிலே பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுக்குழு முறைப்படி அமைக்கப்பட்டால், பின்னர் அதைப்பற்றியும் எதிர்க்கட்சிகள் குறை கூறலாம் என்ற எண்ணத்தோடு தான் எதிர்க்கட்சியினருக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா என்று நான் கேட்டிருந்தேன்.

இதையொட்டித்தான் ஜெயலலிதா காங்கிரஸ் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லையா என்று வழக்கம்போல "சிண்டு முடியும்'' பணியிலே ஈடுபட்டுள்ளார். பலமுறை இத்தகைய முயற்சியிலே ஈடுபட்டு தோல்வியைத் தழுவிய நிலையிலும் மீண்டும் மீண்டும் அந்த முயற்சியிலே ஈடுபடுகிறார். காங்கிரசுக்கும் எங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது, எங்களுக்கும் காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு வேண்டுமென்ற பா.ஜ.க.வின் கோரிக்கையை முழு அளவிலே ஆதரித்துக் கொண்டே, காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயா விரிக்கும் மாய வலையைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் யாரும் இல்லை. உங்களின் நிலையை தெரிந்து கொண்டுதானே மார்க்சிஸ்ட் கம்iனிஸ்ட் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகையிலே கொடுத்திருந்தார்கள். நான்கு நாட்களாக அதற்குப் பதில் சொல்ல வக்கில்லை, இதில் எங்களைப் பற்றிப் பேச மட்டும் ஜெயாவுக்கு வெட்கமாக இல்லைபோலும்!

எந்தப் படத்தில் அந்த சவால்?!

கேள்வி: "தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிட மாட்டேன்'' என்று ஒரு கட்சியின் தலைவர் சவால் விட்டிருக்கிறாரே?.

பதில்: எந்தத் திரைப்படத்தில்?

கேள்வி: ஜெயலலிதாவின் அறிக்கையால்தான் ஆ.ராஜா தன் பதவியை ராஜினாமா செய்தார் என்று வெளியிடப்பட்ட செய்தியை கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

பதில்: "பூனைக் கண்ணை மூடிக் கொண்டு, உலகமே தன்னால்தான் இருண்டு விட்டது'' என்று சொல்லிக் கொள்ளுமாம்! கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் மழை பெய்து, அணைகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் வேகமாக நிரம்பி வருவது கூட அவரால்தான் என்று அடுத்த அறிக்கையிலே சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம்! ஜெயா ஏதோ அஸ்திரம் விட்டு அதற்காக நான் பதறுகிறேன், வழக்கு, கைது என்றெல்லாம் அறிக்கையிலே பம்மாத்து செய்து பயமுறுத்தியிருக்கிறார்? நான் தந்தை பெரியாரின் பெருந் தொண்டன்! பேரறிஞர் அண்ணாவின் தம்பி! கோடி கோடியாக குவித்த காரணத்தால் போடப்பட்ட வழக்கில் சாட்சிகள் விசாரணையும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் கோட நாட்டில் குப்புறப்படுத்துக் கொண்டு அறிக்கை வேறு ஒரு கேடா?.

சுயமரியாதை வருமா...

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் முதலில் ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தவர்கள், அவர் பதவி விலகிய பிறகு பொதுக் கணக்குக் குழுவிற்கு தணிக்கை அறிக்கையை அனுப்பாமல், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்று கோருகிறார்களே?.

பதில்: தம்பி ராஜா பதவி விலகிய பிறகு, தணிக்கைக் குழு அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு விசாரிக்கும் என்று அரசின் சார்பில் அறிவித்திருந்தால்; எதிர்க் கட்சியினர் அதை ஏற்க மாட்டோம், எங்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்கு குழுவின் விசாரணைக்குத் தான் அனுப்ப வேண்டும், அவர் அந்த விசாரணையை நடத்தக் கூடாது என்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவிற்கு அனுப்புகிறீர்கள், அதை ஏற்கும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்; என்று சொல்லியிருப்பார்களோ என்னவோ? ஏதோ ஒரு காரணம் வேண்டுமே, பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வதற்கு! என் செய்வது; "ஞானசூரிய''னின் சூடுபட்ட பிறகாவது தமிழர்களுக்கு சுய மரியாதை உணர்வு வருமா?

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X