பெண்கள் வெளியே வர அஞ்சும் நிலை-ஜெயலலிதா சொல்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jayalalitha
சென்னை: அரக்கோணத்தில் கொலை, கொள்ளை ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், பட்டப்பகலில் கூட பெண்கள் வெளியே வர அஞ்சுகின்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக
அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், குப்பைகள் அள்ளப்படாததன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும், பிறப்பு, இறப்பு சான்றுகள் கூட பெற முடியாத அவல நிலை நிலவுவதாகவும், நகராட்சி ஆணையர் பணியிடம் நிரப்பப்படாததன் காரணமாக புகார்கள் கூட கொடுக்க முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைப்படுகின்றனர்.

இது மட்டுமல்லாமல், ஆதி திராவிட மக்களுக்கு இது நாள் வரை பட்டா வழங்கப்படவில்லை என்றும், இரட்டை கண் வாராபதியில் இரண்டு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், அரசு பொது மருத்துவமனை எந்தவித அடிப்படை வசதியுமின்றி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், ஆட்டுப்பாக்கம், தக்கோலம், மூதூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் களிமண் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்ப்பதாகவும், நெமிலி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், பள்ளூர்- திருமால்பூர் நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் போதிய பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

இதே போன்று, காவேரிப்பாக்கம் ஒன்றியத்திலும் எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை.

கடுமையான மின்வெட்டு காரணமாக நெசவுத்தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், நிர்வாகத்திற்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

பண மோசடி, நில மோசடி, கொலை, கொள்ளை ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், பட்டப்பகலில் கூட பெண்கள் வெளியே வர அஞ்சுகின்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...