For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொகுதிப் பங்கீட்டு சிக்கல் திமுக, காங். நடத்திய நாடகம்-ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தொகுதிப் பங்கீடு சிக்கல் தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே நடந்தது மிகப் பெரிய நாடகம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தி.மு.க. - காங்கிரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள் ஊடகங்களுக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்து இருக்கலாம். தொகுதி எண்ணிக்கை தொடர்பான காங்கிரஸ் கோரிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். ராஜினாமா கடிதங்களை கொடுக்கப் போகிறோம் என்ற நாடகத்தினை முன்னிறுத்தி, தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். ஆனால், ராஜினாமாக் கடிதங்கள் அவர்களுடைய சட்டைப் பைகளிலிருந்து வெளி வரவில்லை.

இதற்குப் பதிலாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது.ஊடகங்களும்,மக்களும் ஒரு முழு வாரத்திற்கு ஸ்பெக்ட்ரம் புலன் விசாரணையை மறக்கும் நிலைக்கு இந்த நடவடிக்கை தள்ளுவதாக அமைந்துவிட்டது.இது மட்டுமல்லாமல், விலைவாசி மற்றும் எண்ணிலடங்கா இதர பிரச்சினைகளை மறக்கும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கினை கர்நாடகா தர மறுத்த போதும்,முல்லைப் பெரியாறில் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு திரும்பத் திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட போதும், வறுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசிலிருந்து விலகப் போகிறோம் என்று மத்திய அரசை கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல,பாரதப் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பினார்.

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது காங்கிரசுக்கு மிகப் பெரிய சங்கடம் ஆகும்.இந்த அளவுக்கு காங்கிரசுக்கும்,காங்கிரஸ் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டியவர்கள் இந்த மாநிலத்தில் உள்ள பாவப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களே.இந்த கபடநாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், நகரத்திலிருந்தும் எனக்கு வருகின்ற தகவல்கள் இதைத் தான் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்ப வல்லமையுடைய இளைய தலைமுறையினர் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னணு அஞ்சல் மூலமாக பரிமாறிக் கொள்ளும் செய்திகளும் இதைத் தான் பிரதிபலிக்கின்றன.ஆனால்,வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தன்னுடைய விலைமதிப்பற்ற வாக்கினைச் செலுத்த முன்வர வேண்டும். இல்லையெனில்,திருமங்கலம் யுக்தி, சிவகங்கை யுக்தி, என பாடப் புத்தகங்களில் இடம்பெறாத சட்டவிரோத யுக்திகள் எல்லாம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசியலில் எதிர் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், செழுமையாகவும்,பிரகாசமாகவும் விளங்குவதை உறுதி செய்ய அனைவரும் விழிப்புடனும், எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.தனது ஜனநாயக கடமையை ஆற்றி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

English summary
ADMK General Secretary Jayalalitha has slammed DMk and Congress for their seat sharing issue. She said that it is a staged one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X