வாக்காளர்களுக்கு கொடுத்த லஞ்சத்தை திருப்பிக் கேட்ட வாழப்பாடி வேட்பாளர்- மக்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Cash
வாழப்பாடி: ஓட்டுப் போடுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, தோல்வியைத் தழுவிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தற்போது தாங்கள் கொடுத்த பணம், சேலை உள்ளிட்டவற்றைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வாக்காளர்கள் வெட்கித் தலை குனிந்து பெரும் அவமானத்துக்குள்ளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த கிட்டத்தட்ட அத்தனை தேர்தல்களிலும், தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் தலை குனிய வைக்கும் வகையில், வாக்களிக்கப் பணம் கொடுத்து புதிய ஜனநாயக நடைமுறையை அமல்படுத்தின அரசியல் கட்சிகள். திருமங்கலத்தில் தொடங்கிய அந்த அசிங்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

பணம், தங்கக் காசு, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, கட்டில் என வாக்களிக்க மக்களுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தன அரசியல் கட்சிகள். சற்றும் வெட்கமோ, மானமோ இல்லாமல் அரசியல் கட்சிகள் செய்த இந்த ஈனச் செயலால் மக்களில் பெரும்பாலானோர் முகம் சுளிக்கவில்லை. மாறாக போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். பொருட்கள், பணம் கிடைக்காதவர்கள் தேடிப் போய்க் கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

ஆனால் இன்று வேறு ஒரு புதிய சூழலை தமிழக வாக்காளர்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அது வாக்களிக்க பணம் கொடுத்து, தேர்தலி்ல தோல்வியுற்ற வேட்பாளர்கள் அந்தப் பணத்தையும், பிற பொருட்களையும் திரும்பக் கேட்க ஆரம்பித்துள்ளனராம். இதனால் தமிழக வாக்காளர்கள் வெட்கித் தலை குணியும் அவமானகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 28வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் லதா ராசாத்தி என்பவர், வாக்காளர்களுக்கு வீடு வீடாக சேலையை அன்பளிப்பாக வழங்கி பெண்களிடம் வாக்கு சேகரித்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் போய் தோற்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா ராசாத்தி, தனக்கு பெண்கள்தான் ஓட்டுப் போடவில்லை என்று கருதி தான் சேலை கொடுத்த வீட்டுக்கெல்லாம் போய், எனக்குத் தான் ஓட்டுப் போடவில்லையே, பிறகு எதற்கு நான் கொடுத்த சேலை என்று கோபத்துடன் கேட்டு அதை அத்தனை பேரும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுச் சென்றார். இதனால் வெட்கிப் போன பெண்கள் அந்த சேலைகளுடன் வேட்பாளரை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

இந்த நிலையில், வாழப்பாடி பகுதியில் ஒரு வேட்பாளர் தான் கொடுத்த பணத்தைத் திரும்பித் தருமாறு கூறி வாக்காளர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியையொட்டி, கல்ராயன்மலை கருமந்துறை சாலையில் துக்கியாம்பாளையம் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. மாரியம் மன்புதூர், மேலூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமத்தை உள்ளடக்கிய எஸ்.சி., இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கலைச் செல்வி, ராஜாமணி, ராமாயி, கலைமணி, பழனியம்மாள் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

அதில் மக்கள் நலப்பணியாளர் தனபால் மனைவி கலைச்செல்வி 1089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.100 வீதம் பணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அந்த வேட்பாளரின் கணவர், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று, எனக்கு யாரும் ஓட்டுபோடவில்லை அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் எனக் கூறி, வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பணம் வாங்கிய வாக்காளர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். இனிமேலாவது எந்த வேட்பாளராவது பணமோ, பொருளோ கொடுக்க வந்தால் வீட்டில் துடைப்பத்தை தயாராக வைத்துக் கொண்டால் மட்டுமே வாக்காளர்களின் கெளரவமும், அவர்களின் 'இறையாண்மை'யும் காக்கப்படும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vazhapadi rural panchayat candidate, who was defeated in the election, has demanded the return of bribe cash from the voters. The voters are shocked and returning their money.
Please Wait while comments are loading...