For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு பகையில் வீழ்த்தப்பட்ட பசுபதி பாண்டியன்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துடனான 19 ஆண்டு கால பகையின் விளைவாக திண்டுக்கலில் வைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார் பசுபதி பாண்டியன். கடந்த ஒன்றரை வருடமாக பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய பண்ணையார் தரப்பு திட்டமிட்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை நடுங்க வைத்த படுகொலைகளில் ஒன்றாக பசுபதி பாண்டியன் கொலை மாறியுள்ளது. ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த பசுபதி பாண்டியனை 3 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பியது.

தலித் தலைவரான பசுபதி பாண்டியன் பல்வேறு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து என பல வழக்குகளில் தொடர்புடையவர். அவருக்கும், மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துக்கும்தான் மிகத் தீவிரமான முன்பகை இருந்து வந்தது. இன்று நேற்றல்ல, கடந்த 19 வருடங்களாக இருந்து வந்த தீராப் பகை இது.

இதற்கு முக்கியக் காரணம், பண்ணையார் குடும்பத்தில் மூத்தவரான சிவசுப்பிரமணியன் நாடார், அவரது மகன் அஸ்வதி ஆகியோரை பசுபதி பாண்டியன் கொலை செய்ததுதான். அஸ்வதி நாடாரின் மகனான வெங்கடேஷ் பண்ணையார் சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.

அதனால் கொதித்தெழுந்த அவரது மனைவி ராதிகா செல்வியை திமுக தனது கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு எம்.பி. தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தது. பின்னர் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகவும் உயர்ந்தார்.

வெங்கடேஷ் பண்ணையார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் மூலக்கரை சாம்ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

சுபாஷ் பண்ணையார் மீ்தும் ஏகப்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பல காலமாக அவர் தலைமறைவாகத்தான் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து சுபாஷ் பண்ணையார் மீதுதான் முதல் சந்தேகம் எழுந்தது. தற்போது அது உறுதியாகி விட்டது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் துப்பு துலங்கியதைத் தெரிவித்தார்.

தற்போது இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரையும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ஏற்கனவே ஆறுமுகசாமி மற்றும் அருளானனந்தன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான் சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலைக்கு திட்டமிட்டு தூண்டி விட்டது என்பதைத் தெரிவித்தனர். கொலையைச் செய்தவர்கள் இந்த இருவரும் மற்றும் சண்முகசுந்தரம் என்பவரும் ஆவர்.

நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா என்பவர்தான் கொலையாளிகள் தங்க வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். அவரும் தற்போது தலைமறைவாகி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாகவே பசுபதி பாண்டியனை தீர்த்துக் கட்ட இந்தக் கும்பல் திட்டமிட்டு வந்துள்ளது. இதில் பலமுறை பசுபதி பாண்டியனைத் தீர்த்துக் கட்ட முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால் அது பலிக்கவில்லை.

கொலையாளிகள் அத்தனை பேருமே தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சுபாஷ் பண்ணையார் விரைவில் பிடிபடுவார் என்று எஸ்.பி.ஜெயச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருக்கு மும்பையில் நிறைய தொடர்புகள் இருப்பதால் அங்கும் போலீஸ் தனிப்படை விரைந்துள்ளதாக தெரிகிறது.

விசாரணைக்குத் தேவைப்பட்டால் ராதிகா செல்வியும் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
19 year old enmity with Moolakarai Pannaiyar family has killed Pasupathi Pandian, revealed DIndigul SP Jayachandran. Subash Pannaiyar has been named as the prime accused in the Pasupathi Pandian murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X