For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெறும் 23 கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்த சசிகலா.. வழக்கை இழுத்தடிக்க முயற்சி!

By Chakra
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி நீதிபதியின் கேள்விகளுக்கு மிக மிக நிதானமாக பதிலளித்தார். 5 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் 23 கேள்விகளுக்கு மட்டுமே பதில் தந்தார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் சசிகலா, இளவரசி ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகினர். ஆனால், ஜெயலலிதா, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின் கீழ் சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த விசாரணையின்போது 40 கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்திருந்தார். நேற்று 41 வது கேள்வியை தொடர்ந்தார் நீதிபதி.

விசாரணை நடந்த 5 மணி நேரத்தில் நீதிபதி கேட்ட 23 கேள்விகளுக்கு மட்டுமே சசிகலா பதிலளித்தார்.

அப்போது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஜப்பானில் இருந்து அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்தது தொடர்பான பணப் பரிமாற்றங்கள் குறித்த கேள்விகளும் சசிகலாவிடம் கேட்கப்பட்டன. அது தொடர்பான வங்கிப் பரிமாற்றங்கள் குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அச்சு இயந்திரங்களை வாங்குவதற்கு எண் 36, போயஸ் தோட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறுவது பொய் என்று சசிகலா கூறினார். அதே நேரத்தில் ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்துக்கு அச்சு இயந்திரங்கள் வாங்கியதை சசிகலா ஒப்புக்கொண்டார்.

இது குறித்து சசிகலா பதிலளிக்கையில், ரூ.20.16 லட்சத்துக்கு அச்சு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஆனால், இயந்திரங்கள் பழையன என்பதால் அதை அங்கேயே விட்டுவிட்டோம். இதற்கான தொகை யூனி ஆஃப்செட், ஐரியல் பேக்கேஜிங், அமர் எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் சார்பில் செக்குகள் தரப்பட்டன என்றார்.

பின்னர் 1994ம் ஆண்டில் ஜெகதீஷ்ராஜு, சந்திரவதனா, காயத்ரி ஆகியோருக்கு சொந்தமான 600 சதுர அடி நிலத்தை வாங்கியது தொடர்பாக நீதிபதி கேள்விகள் கேட்டார்.

நீதிபதி: 1992-93ம் ஆண்டில் ஜெகதீஷ்ராஜு, சந்திரவதனா மற்றும் காயத்ரி ஆகியோர் வாங்கிய நிலத்தை, விற்பனை செய்ய முடிவு செய்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த நிலத்தை அமானுல்லாகான் 10 லட்சம் கொடுத்து வாங்கியது தெரியுமா?

சசிகலா: தெரியும். இவர்களுக்குச் சொந்தமான 600 சதுர அடி நிலத்தை சன்ரைஸ் அவென்யூ பிராபர்டி வாங்கியது. பின்னர் அதை நான் பங்குதாரராக இருக்கும் கிரீன் ஹவுஸ் நிறுவனத்துக்காக வாங்கினோம். இதற்காக ரூ.10 லட்சத்தில் விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், அந்த நிலத்தை இதுநாள்வரை பதிவுசெய்யவில்லை. இந்நிலத்திற்கான தொகையாக ஜெகதீஷ்ராஜுக்கு ரூ.2,35,200; சந்திரவதனாவுக்கு ரூ.2,35,200; காயத்ரிக்கு ரூ.5,30,400 வங்கி வரைவோலையாக அளிக்கப்பட்டன.

நீதிபதி: இந்த வழக்கில் நிலம் தொடர்பாக சாட்சி சொன்ன ஜெகதீஷ்ராஜு, 10 லட்சத்திற்கு வாங்கிய நிலத்தை, ரூ. 20 அல்லது 30 லட்சம் கொடுத்து வாங்கியதாக லஞ்ச, ஒழிப்பு துறை அதிகாரிகள் மிரட்டியதாக கூறியுள்ளாரோ?

சசிகலா: எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று ஏற்கனவே தெரிவித்து வருகிறோம். கிரீன் பார்ம் ஹவுஸ் நிறுவனத்திற்கு ஜெகதீஷ்ராஜு உள்பட 3 பேர் ரூ.10 லட்சத்திற்கு நிலம் விற்பனை செய்தனர். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு மற்றும் சில போலீஸ் அதிகாரிகள், ஜெகதீஷ்ராஜுவை மிரட்டி, கிரீன் பார்ம் ஹவுஸ் நிறுவனத்திற்கு 10 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக சொல்லாமல், 20 அல்லது 30 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக எழுதிக்கொடு என்று மிரட்டியுள்ளனர். அவர் மறுத்துள்ளார்.

அதை தொடர்ந்து, வழக்கில் போலி ஆவணங்கள் தயாரித்து அதிகம் விலைக்கு வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் சாட்சி விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் தன்னை மிரட்டியதாக ஜெகதீஷ்ராஜு தெரிவித்தார். இது ஒன்றே எங்கள் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதற்கு சாட்சி என்றார் சசிகலா.

இதைத் தொடர்ந்து சசி என்டர்பிரைசஸ், கிரீன் ஹவுஸ், ஜே.எஸ்.ஹவுசிங் நிறுவனங்களுக்கு பல்வேறு இடங்களில் நிலம் வாங்கியது தொடர்பான பணப்பரிமாற்றங்கள் உள்பட பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டன.

நீதிபதி: அம்பத்தூரில் 4,830 சதுர அடி நிலம் மற்றும் 600 சதுர அடியில் கட்டியிருந்த வீட்டை ரமேஷ் என்பவர் 5 லட்சம் கொடுத்து வாங்க அதன் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போட்டார். அதை அவர் வாங்காமல் போனதால், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஒருவர் மூலம் வாங்க ஏற்பாடு செய்ததாகவும், அதற்கான பவர் ஆப் அட்டர்னி போட சொன்னதும் உண்மையா?

சசிகலா: ஜெயலலிதா சார்பாக ஒருவர் வந்தார் என்பது தவறான கருத்து.

நீதிபதி: சோழிங்கநல்லூர் கிராமத்தில் சகாரி தினாரிவாலா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்த 50 சென்ட் நிலம் கடந்த 1982,83ல் வாங்கியுள்ளனர். இந்நிலத்தை 1994ம் ஆண்டு வி.என்.சுதாகரன் வாங்கி ஜெயா பார்ம் ஹவுஸ் நிறுவன பெயரில் பதிவு செய்துள்ளது உண்மையா?
சசிகலா: உண்மை

நீதிபதி: அண்ணாசாலையில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 1 கிரவுண்டு நிலம் மற்றும் ஆயிரத்து 475 சதுர அடி நிலம் 43 லட்சம் கொடுத்து வாங்கியது உண்மையா?

சசிகலா: உண்மை.

வழக்கை இழுத்தடிக்க முயல்கிறார் சசிகலா-ஆச்சார்யா:

சசிகலாவிடம் கேள்வி கேட்பது முடிந்ததும், அரசு வழக்கறிஞர் சந்தேஷ் எழுந்து, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, 1,339 கேள்விகளுக்கு 4 நாளில் பதிலளித்தார். 2வது குற்றவாளி சசிகலாவிடம் 2 நாளில் 63 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இன்று 5 மணி நேரத்தில் 23 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார். இவ்வளவு நிதானமாக சென்றால், 40 நாட்கள் ஆனாலும் விசாரணை முடியாது.

இவ்வாறு சசிகலா பதிலளித்தால், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து முடிக்க இவர் 40 நாட்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டியதிருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னையில் விசாரணை நடந்துள்ளது. எனவே நீண்ட பதில் அவசியமில்லை. சுருக்கமாக பதில் சொல்ல வேண்டும் என்றார்.

அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறுகையில், ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், வழக்கை காலம் கடத்த சசிகலா முயல்கிறார் என்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெறும் 5 நாட்கள் தினமும் 5 மணி நேரம் ஆஜராகி சுமார் 1,400 கேள்விகளுக்கு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்கிறது.

English summary
The Special Court here trying the disproportionate assets case against Tamil Nadu Chief Minister Jayalalithaa was able to get answers for only 23 questions from her former aide and co-accused Sasikala, during the five-hour-long proceedings on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X