புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடுவோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
G Ramakrishnan
மதுரை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள மார்க்சிஸ்ட் விரும்பவில்லை என்று மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அதிமுக பதவியேற்ற பிறகு, மக்களுக்குக் கொடுத்ததை விட எடுத்துக் கொண்டதுதான் அதிகம். பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணம் என எல்லாவற்றிலும் எல்லாத்துறையிலும் கட்டண உயர்வை அதிகரித்து ஏழை மக்களை வாட்டிவதைக்கிறது. ரூ.20 ஆயிரம் கோடிக்கு மக்களிடம் இருந்து அதிமுக அரசு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் மக்கள் விரோதப் போக்கை எடுத்துச் சொல்வோம். எனவே, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட்டின் நிலை குறித்து, மே 10,11ல் மாவட்டக்குழுவுடன் மாநில நிர்வாகிகள் குழு கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள மார்க்சிஸ்ட் விரும்பவில்லை. இது ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்ட தொகுதி என்பதால், நாங்கள் அவர்களை ஆதரிப்பதாக முன்பேயே தெரிவித்துவிட்டோம். எனவே இது குறித்து அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

அதிமுகவின் நடவடிக்கைகள், மக்கள் விரோதப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறோம். எனவே அதிமுகவுக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

இத்தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று ஒரிஜினல் அதிமுககாரரான சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஏற்கனவே அறிவித்து விட்டு கமுக்கமாகி விட்டார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அங்கு இறக்கி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தர திமுக, தேமுதிக ஆகியவை முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு போட்டியிடுவதைத் தவிர்க்க மாட்டோம் என்று ஜி.ஆர். கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPM state secretary G. Ramakrishna has said that his party will not hesitate to contest in Pudukottai. He also said that CPM will campaign against ADMK and will tell the people about the ADMK govt's anti people policies.
Please Wait while comments are loading...