For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

84 மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ61 கோடி ஒதுக்கீடு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 84 மாணவர், மாணவியர் விடுதிகளுக்கு ரூ.61 கோடியே 12 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்வியின் பயனை ஒவ்வொரு மாணவமாணவியரும் குறிப்பாக ஏழை, எளிய, கிராமப்புற மாணவமாணவியர் பெற வேண்டும் என்ற அடிப்படையில் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி என அனைத்து கல்வி உபகரணங்கள்; கல்வி உதவித்தொகை; சத்தான மதிய உணவு என கல்வி கற்க ஏதுவாக அனைத்து வசதிகளையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

மேலும், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவமாணவியர் ஆரோக்கியமான சுற்றுச் சூழலில் அனைத்து வசதிகளைப் பெற்றிட வேண்டும் என்பதற்காக, தனியார் கட்டடங்களில் இயங்கும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன் அடிப்படையில் தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 148 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக, தற்பொழுது நிலம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ள 50 மாணவ/மாணவியர் எண்ணிக்கைக் கொண்ட 69 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ/மாணவியர் விடுதிகள் மற்றும் 100 மாணவ/மாணவியர் எண்ணிக்கைக் கொண்ட 15 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகள் என தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் 84 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ/ மாணவியர் விடுதிகளுக்கு 61 கோடியே 12 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கும், இந்த விடுதிகளில் 3 கோடியே 35 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சூரிய எரிசக்தி கருவிகள் நிறுவுவதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் நலனுக்காக 24 மேல்நிலைப் பள்ளிகள், 25 உயர்நிலைப்பள்ளிகள், 25 நடுநிலைப் பள்ளிகள், 211 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 285 அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 37,556 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

எந்தெந்த இடங்கள்?

பிரமலை கள்ளர் வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி பயிலுவதை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு, மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி, தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் பொ.மீனாட்சிபுரம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், மதுரை மாவட்டம் கரடிக்கல் மற்றும் முத்துப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சித்தர்கள் நத்தம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், தேனி மாவட்டம் மார்க்கையன் கோட்டை மற்றும் முத்தணம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கூறிய 9 அரசு கள்ளர் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதன் காரணமாக, 24 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 27 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 3 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 3 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் என 57 பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரத்து 80 ரூபாய் செலவினம் ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today ordered construction of own buildings for 148 hostels for backward, most backward and denotified tribe students all over the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X