For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் சட்டத்தை மீறிய கர்நாடகா மீது இன்னும் நடவடிக்கை எடுக்காது ஏன்?: ராமதாஸ்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடாமல் அரசியல் சட்டத்தை மீறி செயல்படும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக, அக்டோபர் 15ஆம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையமும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் 16 முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மொத்தம் 8.85 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான துருவ் விஜய்சிங் ஆணையிட்டுள்ளார். ஆனால், வழக்கம் போலவே, இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறி, கூட்டத்திலிருந்து கர்நாடக தலைமைச் செயலாளர் வெளிநடபு செய்திக்கிறார்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கண்காணிப்புக் குழுவின் உத்தரவு ஆராயாமல் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் மத்தியக் குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கர்நாடகத்தில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் அறிக்கை அளித்ததன் அடிபடையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்திற்கு தருவதற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகம் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்பதையே தங்களின் சாதனையாக காட்டி, வரும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கர்நாடக அரசு இவ்வாறு செயல்படுகிறது. தங்களின் சுயநலனுக்காக தமிழக விவசாயிகளின் நலனை பறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் கொடூர மனப்பான்மை கடுமையாக கண்டிக்கத் தக்கது.

கர்நாடகாவின் அரசியல் சட்ட மீறல்

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, தற்போது கண்காணிப்புக் குழுவின் ஆணையையும் ஏற்க மறுத்திப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு மீண்டும் ஒரு சவால் விடுத்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாட்டின் ஒருமைப்பாட்டிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் 53ஆவது பிரிவின்படி கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்றிருப்பதும், கர்நாடக முதல்வர் அளித்த நினைவுப்பரிசை ஏற்றுக் கொண்டிருப்பதும், கர்நாடகத்தின் அரசியல் சட்ட மீறலை அங்கீகரிப்பதைபோல அமைந்துவிடும்.

கேலிப் பொருளான மத்திய அரசு

அரசியல் சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசு மீது இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில், மத்திய அரசு கேலிப் பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடிகளை தமிழகம் தரவேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி தமிழக அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. 2003ஆம் ஆண்டில் இதேபோன்று காவிரி பிரச்சினை தீவிரமடைந்த நிலையில்,பா.ம.க. தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு நியாயம் வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டது. அதைவிடக் கடுமையான சூழல் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்னையில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
PMK founder S Ramadoss on Friday flayed Centre for no action against Karnataka for stopping release of water to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X