For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை எதிர்த்து யார் ஆர்ப்பாட்டம் நடத்துவது?... கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் கட்டண உயர்வுகளையெல்லாம் செய்து விட்டு; தமிழகத்திலே உள்ள அ.தி.மு.க. ஆட்சியினர், மத்தியிலே கட்டண உயர்வு என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது வேடிக்கையாக இல்லையா? விநோதமாக இல்லையா? இரட்டைவேடம் போட்டு, கபடநாடகம் ஆடுவதாகத் தெரியவில்லையா? எதற்காக இந்தத் திடீர் ஆர்ப்பாட்டம்? 2014ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டா? சட்டப்பேரவையிலே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றாத அ.தி.மு.க. அரசை எதிர்த்து யார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசைக் கண்டித்து 24ஆம் தேதி தமிழகத்திலே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். எதற்காக ஆர்ப்பாட்டமாம்? விஷம்போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரெயில்வே கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தி.மு.கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டமாம்!

ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் அ.தி.மு.க. அரசிலே என்ன நிலைமை? இங்கே எந்தவிதமான உயர்வுகளும் செய்யப்படவில்லையா? ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக 4000 கோடி ரூபாய்க்கு புதிய வரிகளை விதிக்கவில்லையா? ஏழை எளிய நடுத்தர மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு, பேருந்துக் கட்டணங்களை உயர்த்தவில்லையா? பால் விலையை உயர்த்தவில்லையா? இல்லாத மின்சாரத்திற்கு பொல்லாத அளவில் கட்டணத்தை உயர்த்தவில்லையா?

இப்படி, பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் கட்டண உயர்வுகளையெல்லாம் செய்து விட்டு; தமிழகத்திலே உள்ள அ.தி.மு.க. ஆட்சியினர், மத்தியிலே கட்டண உயர்வு என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது வேடிக்கையாக இல்லையா? விநோதமாக இல்லையா? இரட்டைவேடம் போட்டு, கபடநாடகம் ஆடுவதாகத் தெரியவில்லையா? எதற்காக இந்தத் திடீர் ஆர்ப்பாட்டம்? 2014ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டா?

2011-2012ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையைப் படித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பத்தி 67இல் இந்த மின்வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக மின்வெட்டு நீக்கப்படும் என்று அறிவித்தார். 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் போய், தற்போது 2013ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது. மின் வெட்டு தமிழகம் முழுவதிலும் முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதா? சட்டப்பேரவையிலே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றாத அ.தி.மு.க. அரசை எதிர்த்து யார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது?

ஏன், 2012ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த இதே முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார்? தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று சொன்னாரா இல்லையா? இப்போது என்ன நிலைமை? ஜெயலலிதா சொன்ன சொல்லைக் காப்பாற்றாததற்காக யார் ஆர்ப்பாட்டம் நடத்துவது?

கர்நாடக மாநில அரசு காவிரி நீர்ப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளையும் அடிக்கடி கூட்டி, ஒரே குரலில் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள், மத்திய அரசிடம் முறையிடுகிறார்கள், நேற்றைய தினம் கூட கர்நாடக அமைச்சரவை கூடி அதிலே மத்திய அரசு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்திலே அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல கட்சிகளும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டும் கூட, அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டியது உண்டா? இறுதித் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று தி.மு.க. மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதாக ஜெயலலிதா கூறுகிறாரே, அவர் ஒரு முதல்வர், இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிக்க அவர் தயாரா?

ஜெயலலிதாவுக்கும், அவரோடு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில் அவரை மறைமுகமாக ஆதரிக்கும் சில கட்சிகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது விலகிவிட வேண்டும், மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும், அதை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டும் என்பதுதான் உள்ளார்ந்த எண்ணம் என்றார் கருணாநிதி.

English summary
Jayalalitha has said that ADMK will protest against the centre which has DMK as its member. But who will protest against this ADMK govt for its mirule,asked DMK chief Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X